சீனா மீது பொருளாதார தடை? அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்

வாஷிங்டன் : ‘கொரோனா வைரஸ் குறித்து உரிய தகவல்களை அளிக்க மறுத்தால், சீனா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை, அதிபர் டொனால்டு டிரம்ப் எடுக்க வேண்டும்’ என, அமெரிக்க பார்லியில், தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தாக்கல்

‘கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவே காரணம்’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர், தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.சீனாவிடம் இருந்து மிகப் பெரிய தொகையை இழப்பீடாக கோர உள்ளதாகவும் அமெரிக்கா கூறி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க செனட் சபையின் மூத்த எம்.பி.,யான லிண்ட்சே கிரஹாம், செனட் சபையில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். அதை, எட்டு எம்.பி.,க்கள் வழி மொழிந்துள்ளனர்.

நடவடிக்கை

டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில்கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவலுக்கு, சீனாவே காரணம். இது தொடர்பாக அமெரிக்கா நடத்தி வரும் விசாரணைக்கு ஒத்துழைத்து, வைரஸ் குறித்த முழு தகவல்களை அளிக்க, சீனாவுக்கு நெருக்கடி தர வேண்டும். மனித குலத்துக்கு ஆபத்தாக செயல்பட்டு வரும், சீனாவில் உள்ள வனவிலங்குகள் சந்தையை மூட வேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், சீனா மீது பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை, அதிபர் டிரம்ப் எடுக்கலாம். இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.

நிபுணர் எச்சரிக்கை

‘மாகாணங்களில் வேக வேகமாக கட்டுப்பாடு கள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இது மிகப் பெரிய ஆபத்தில் முடியும். அதிக உயிர்களை இழக்க நேரிடும். ‘அதனால், நினைத்து பார்க்க முடியாத பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும்’ என, அமெரிக்காவின் பிரபல தொற்றுநோய் நிபுணரான, டாக்டர் ஆன்டனி பாசி, அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

20 ஆண்டுகளில் ஐந்து தொற்றுகள்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராபர்ட் ஓபிரையன் கூறியுள்ளதாவது:கடந்த, 20 ஆண்டுகளில், சீனாவில் இருந்து, ஐந்து வைரஸ்கள் உலகெங்கும் பரவியுள்ளன. சார்ஸ், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், கொரோனா ஆகியவை சீனாவில் இருந்தே பரவின. இதற்கு மேலும் இது தொடரக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.ஆனால், ஐந்தாவது தொற்றுகுறித்து, அவர் தெரிவிக்கவில்லை.

dinamalar