மே 18 : இனப்படுகொலைக்கு நியாயமான தீர்வு வேண்டும்! ~ சாந்தலட்சுமி பெருமாள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அரங்கேறி, இன்றோடு 11 ஆண்டுகள் கடந்து விட்டன.

கடந்த 10 ஆண்டுகளாக, ஜொகூர் செம்பருத்தி தோழர்கள், ஜொகூர் பாரு மாநகரில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிராக நினைவேந்தல் ஒன்றுகூடலை, பிற தோழமை இயக்கங்களுடன் இணைந்து  முன்னெடுத்து வந்துள்ளோம்.

இவ்வாண்டு, உலகளாவிய நிலையில் ஏற்பட்டுள்ள கோறனி நச்சில் (கோவிட்-19) அச்சுறுத்தலின் காரணமாக, அரசாங்கத்தின் அறிவுறுத்தலை ஏற்று, பொது இடத்தில் ஒன்று கூடுவதை நாம் தவிர்த்துள்ளோம். இருப்பினும், பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நாம் பறைசாற்றிக் கொண்டிருப்போம்.

மனிதம் காக்கப்பட வேண்டும், அது அனைவருக்குமானது, இதில் அடையாளங்களை வரையறுக்க முடியாது.

உலக அரங்கில் தொடர்ந்து சிறுபான்மை இனங்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை நாம் கண்டு வருகிறோம்.

தங்கள் அரசியல் நலனையும் வணிக இலாபத்தையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மேற்குலக மற்றும் ஏகாதிபத்திய நாடுகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதியான தீர்வு கிடைக்க எந்தவொரு உறுதியான தீர்மானத்தையும் முன் வைப்பதில்லை. மாறாக,  தங்களின் சர்வதேசப் பொருளாதார வளத்தை, மேலும் வலுபடுத்த ஆளும் வர்க்கத்துடன் இணைந்து அம்மக்களின் ஜனநாயக சுதந்திரத்தை நசுக்க துணை போகிறார்கள்.

இன மரபு, சமயம் அல்லது நாடு இவற்றைக் காரணம் காட்டி, குறிப்பிட்ட சமூகத்தை அழிக்க மேற்கொள்ளப்படும் செயலை இனப்படுகொலை” என்று, ஐநா இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தம் 1948 வரையறுத்து கூறுகிறது.

உலகில் நடந்த சில மோசமான இனப்படுகொலைகள்:-

  1. அர்மீனியர்களின் இனப்படுகொலை – முதலாவது உலகப்போரின் போது 1915 முதல் 1923 வரை ஓட்டோமன் பேரரசு ஏறக்குறைய 12 இலட்சம் மக்களைக் கொன்று குவித்தது.
  2. யூத இனப்படுகொலை – இரண்டாவது உலகப்போரின் போது 1941 முதல் 1945 வரை ஹிட்லரின் நாஜிப்படை 6 மில்லியன் யூதர்களைத் துன்புறுத்தி, வதை முகாம் மற்றும் நச்சுவாயு அறைக்குள் அடைத்துக் கொன்றனர்.
  3. ஈழத் தமிழர் இனப்படுகொலை – 1948-ல், பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்று, இலங்கையின் ஆட்சி அதிகாரம் பெரும்பான்மை பௌத்தர்களிடம் கைமாறியபோது தொடங்கியது தமிழருக்கெதிரான இனப்படுகொலை. 2009-ம் ஆண்டு மே மாதம், இறுதிகட்ட போரின்போது, 146,679 ஈழத்தமிழர்கள் காணாமல் போயிருந்தனர், 100,000 கொல்லப்பட்டிருந்தனர்.
  4. கம்போடிய இனப்படுகொலை – கெம்ரூஜ் தலைவர் பொல் பாட் 1975 முதல் 1979 வரை தனது சித்தாந்தத்திற்கு எதிராக செயல் பட்டவர்களை, சிறையில் அடைத்து சித்ரவதை செய்தும் பசி பட்டினி போட்டும் படுகொலை செய்தார்.
  5. ருவாண்டா இனப்படுகொலை – 1994 ஏப்ரல் 6-ஆம் நாள் தொடங்கி, 100 நாட்களுக்குத் தொடர்ந்த இந்த இனப்படுகொலையில், 8 இலட்சம் சிறுபான்மை டூட்சி இன மக்கள் ஹூட்டு இன மிதவாதிகளாலும் ஹூட்டு இன ஆயுதப்படையினராலும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
  6. போஸ்னியா இனப்படுகொலை – 1992 முதல் 1995 வரை, 44 மாத சரயேவோ நகர முற்றுகையின் போது, இன அழிப்பு, கைது மற்றும் சித்திரவதைப் படலங்கள் அரங்கேறின. இதில் கிட்டத்தட்ட 8000 முஸ்லீம் ஆண்களைக் கொடூரமாக படுகொலை செய்தது செர்பிய ராணுவம்.
  7. சூடான் இனப்படுகொலை – 20 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் 20,000 பேர் உயிர் இழந்து உள்ளனர்
  8. ரோஹிங்கியா இனப்படுகொலை – ஐநா-வின் கூற்றுபடி, இன்று உலகில் அதிகமாகத் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு சிறுபான்மையினம் இந்த இஸ்லாமிய ரோஹிங்கியாக்கள். மில்லியன் கணக்கான ரோஹிங்கியாக்கள் உலகின் பல நாடுகளில் அகதிகளாக, சட்டவிரோதக் குடியேறிகளாக அல்லல்பட்டு வாழ்கின்றனர்.

இப்படி இந்த இனப்படுகொலைகள் தொடர்ந்து கொண்டே போகலாம்.

நாகரிக உலகத்தின் அணுகுமுறைக்கு எதிரான இத்தகைய இனப்படுகொலைகள், உலகின் ஏதாவது ஒரு மூலையில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இனப்படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களையும் இன, மத, நாடு, மொழி பேதமின்றி மனிதாபிமான அடிப்படையில், நினைவில் நிறுத்தி அவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துவோம்; அவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க போராடுவோம்.

தொடர்ந்து கொண்டிருக்கும் இம்மாதிரியான கொடூரங்களுக்கு, தீர்வுகாண உலக நாடுகள் முன்வர வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நிதி கிடைக்க வேண்டும். இந்தப் போர் குற்றத்திற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர்கள் சர்வதேச வழக்கு மன்றத்தில் விசாரிக்கப்பட்டு அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு.

சாந்தலட்சுமி பெருமாள் , ஒருங்கிணைப்பாளர், ஜொகூர் செம்பருத்தி தோழர்கள்