பாக்காத்தானை விட்டு வெளியேறுவதற்கான முடிவு தெளிவானது என்று பெரும்பாலான பெர்சத்து தலைவர்கள் கூறுகின்றனர்

பெர்சத்து உச்ச மன்றம், தேசிய கூட்டணிக்கு (பி.என்) தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பாக்காத்தானை விட்டு வெளியேறி புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான நடவடிக்கை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்று கூறியுள்ளது.

பிப்ரவரி 23 அன்று நடந்த பெர்சத்து உச்ச மன்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக 27 உச்ச மன்றம் உறுப்பினர்களும் மாநிலத் தலைவரும் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

“பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற்ற உச்ச மன்ற பொதுக் கூட்டத்தில், பாக்கத்தானில் இருந்து விலகவும், பாக்கத்தானுக்கு வெளியே உள்ள பிற கட்சிகளுடன் ஒரு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவும் ஒருமனதாக முடிவு செய்துள்ளதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். இந்த முடிவு தெளிவாக உள்ளது என்பதால் அதை சர்ச்சை ஆக்கத் தேவையில்லை” என்று அந்த கூட்டு அறிக்கை கூறியுள்ளது.

“முகிதீன் யாசின் தலைமையில் பி.என். அரசாங்கத்திற்கு எங்கள் முழு ஆதரவை வெளிப்படுத்த விரும்புகிறோம்” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

டாக்டர் மகாதீர் முகமது, பெர்சத்து கட்சி இன்னும் பாக்கத்தானுடன் இருப்பதை உறுதிப்படுத்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது.

கூட்டு அறிக்கையை வெளியிட்ட பெர்சத்து தலைவர்களில், துணைத் தலைவர் அப்துல் ரஷீத் அப்துல் ரஹ்மான், சிலாங்கூர் துணைத் தலைவர் அப்துல் ரஷீத் ஆசாரி, மகளிர் தலைவர் ரினா ஹருன், பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுதீன் மற்றும் தகவல் தொடர்பு தலைவர் ராட்ஸி ஜிடின் ஆகியோர் அடங்குவர்.

பட்டியலில் இல்லாத தலைவர்களில் டாக்டர் மகாதிர் முகமது, உச்ச மன்ற உறுப்பினர்கள் கதிர் ஜாசின், தாரிக் இஸ்மாயில், மஸ்லீ மாலிக் மற்றும் இளைஞர் தலைவர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான் ஆகியோர் அடங்குவர்.