ROS: டாக்டர் மகாதீரின் பதவி விலகல் செல்லுபடியாகும்

பிப்ரவரி 24 ஆம் தேதி டாக்டர் மகாதீர் முகமட் தனது பதவி விலகல் கடிதத்தை முகிதீனிடம் ஒப்படைத்த பின்னர், பெர்சத்துவின் தலைவர் முகிதீன் யாசினுக்கு கட்சியின் இடைக்கால அவைத்தலைவர¡கச் செயல்பட “உரிமை உண்டு” என்பதை மலேசிய சங்கங்களின் பதிவாளர் (ROS) உறுதிப்படுத்தியுள்ளது.

மே 5 தேதியிட்ட ஒரு கடிதத்தில், சம்பந்தப்பட்ட தரப்பினரால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த மதிப்பீடு அமைந்துள்ளது என்று ROS தெரிவித்துள்ளது.

“சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் (அதாவது டாக்டர் மகாதீரின் பதவி விலகல் கடிதம்) பெர்சத்துவின் அவைத்தலைவர் பதவியில் இருந்து மகாதீர் விலகியது செல்லுபடியாகும். பெர்சத்து அரசியலமைப்பின் விதிகளின்படி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை இது நடைமுறையில் இருக்கும் என்பதை ROS உறுதிப்படுத்தியுள்ளது”.

அவைத்தலைவர் பதவி விலகினால் அல்லது கட்சியில் இருந்து நீக்கப்பட்டால், புதிய அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, தலைவர் (முகிதீன்) இடைக்கால அவைத்தலைவர் பதவியை வகிப்பார் என்று அரசியலமைப்பு விதிக்கிறது.

கட்சி அவரை எதிர்த்ததையடுத்து, பிப்ரவரி 24 ஆம் தேதி மகாதீர், பிரதமர் மற்றும் பெர்சத்து கட்சியின் அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் முகிதீன் பெர்சத்து கட்சியை பாக்காத்தான் ஹராப்பானில் இருந்து வெளியேற்றி தேசிய கூட்டணியை (பிஎன்) அமைத்தார்.

பதவி விலகிய சிறிது காலத்திலேயே, கட்சியின் அவைத்தலைவர் பதவியை தொடர்ந்து வகிக்க பெர்சத்து மகாதீரை சமாதானப்படுத்தியதுடன், அவர் அந்தப் பதவியை மீண்டும் வகிப்பதாக அறிவித்தார்.

இருப்பினும், பின்னர் அவர்கள் மகாதீரை பி.என்-இல் சேர சமாதானப்படுத்தத் தவறிவிட்டனர். இதனால் அவைத்தலைவராக நீடிப்பதற்கான மகாதீரின் முந்தைய அறிவிப்புகளை முகிதீனின் முகாம் நிராகரித்தது.

மகாதீருடனான விவாதத்தைத் தொடர்ந்து, முகிதீனின் முகாம், மகாதீரின் பதவி விலகலை கட்சி மறுக்க முடியாது என்றும், அவைத்தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கூறினர்.