தென் கொரியாவில் கொரோனா அச்சத்திற்கு மத்தியில் பள்ளிகள் திறப்பு

பள்ளிக்கு உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்

தென்கொரியாவில் கொரோனா வைரசின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

சியோல்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது. தொழில் துறைகள் முடக்கப்பட்டதால் பொருளாதார பேரிழப்பு ஏற்பட்டதுடன், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அவ்வகையில் தென்கொரியாவில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால், புதிய இயல்பு வாழ்க்கைக்கு நாடு தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்பத் தொடங்கினர்.

மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும்போது, அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகே வகுப்பறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

வகுப்பறையில் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் ஒவ்வொரு மாணவரின் டெஸ்க்கிலும் பிளாஸ்டிக் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

சியோல் அருகே உள்ள ஒரு பள்ளியில் 2 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த பள்ளி மட்டுமின்றி அருகில் உள்ள  சில பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் உடனடியாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது அவ்வளவு எளிதல்ல என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.

தற்போது மேல்நிலை மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்பு மாணவர்கள் ஜூன் 8 ஆம் தேதிக்குள் படிப்படியாக பள்ளிக்குத் திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் கடந்த ஒரு வார காலமாக தினசரி நோய்த்தொற்று 30க்கு குறைவாக இருந்தது. இன்று வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 32 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 263 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

malaimalar