கோவிட்-19: ஊருக்குத் திரும்பிய கர்ப்பிணிப் பெண்ணால் மீண்டும் கிளந்தானில் பாதிப்பு

கோவிட்-19 பாதிப்பு கிளந்தானில் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கர்ப்பிணிப் பெண் தன் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக சிலாங்கூரிலிருந்து கோலா கிராயில் உள்ள தனது ஊருக்கு திரும்பியபோது இது அடையாளங்காணப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவித்தன.

அந்த பெண் மே 15 அன்று சிலாங்கூரில் உள்ள ஆம்பாங்கில் இருந்து கோலா கிராய் மாவட்டத்தில் உள்ள தன் ஊருக்குச் சென்றதாக கூறப்பட்டது.

இந்த நோயாளி தன் பயணத்தை மேற்கொண்டபோது காய்ச்சல் அல்லது இருமல் போன்ற கோவிட்-19 அறிகுறிகள் இல்லாமல் இருந்துள்ளார்.

“அந்த பெண் மே 15 அன்று தனது ஊருக்குத் திரும்பினார். இவரின் பயணம் கெராக் மலேசியாவின் பயணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் பிரசவத்திற்காக அங்கு சென்றுள்ளார்,” என்று ஆதாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த ஒரு கோவிட்-19 பாதிப்பும் இல்லாது இருந்த கிளந்தான் இதனால் மீண்டும் பாதிப்பு உள்ள பகுதியானது.

அந்த பெண் இப்போது ராஜா பெரம்புவான் ஜைனாப் II மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள், சுகாதார கிளினிக்கில் ஊழியர்கள் உட்பட 20 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கிளந்தான் சுகாதாரத் துறைக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.