இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,12,359 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,12,359-ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி, சீனாவில் உருவான கோவிட்-19 என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ் உலகில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில், கொரோனா அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளை போன்று அதிக பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றாலும், தன்னால் முடிந்தவரை ஊரடங்கு மத்தியில் பலரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினமே இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609-பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,12,359- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  45300- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  3435 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 132 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனா 39,297 -பேரை நோய் பாதிப்புக்கு ஆளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,448-ல் இருந்து 13,191 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்திலும் இந்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துவிட்டது.  குஜராத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 12537- ஆக உள்ளது.  டெல்லியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை   11,088- ஆக உள்ளது.

dailythanthi