அம்பான் புயலுக்கு 12 பேர் பலி; வீடுகள் சூறை

‘அம்பான்’ புயல் இன்று இரவு மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 150-165 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. புயலுக்கு மேற்கு வங்கத்தில் 10 முதல் 12 பேர் வரை பலியானதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

24 பர்கனாஸ், ஹவுரா, கோல்கட்டா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகள் புயலால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன.

மழை காரணமாக கோல்கட்டா விமான நிலையத்தில் வெள்ள நீர் தேங்கியது. இதனால், அங்கு சேதம் ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. கோல்கட்டாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சில கார்கள் கவிழ்ந்தன. மின்சார கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன. இதனால், பல நகரங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. பல தெருக்களில் வெள்ள நீர் தேங்கியும் மரங்கள் சாய்ந்தும் கிடக்கின்றன. கோல்கட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: இன்று அதிகாலை நிலவரப்படி, அம்பான் புயல் படிப்படியாக வலு குறைந்து புயல் சின்னமாக மாறியுள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும். அதிகாலை கோல்கட்டா தென்கிழக்கே 270 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால், அசாம், மேகாலயாவில், இன்று ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

dinamalar