தேசிய மசூதிக்கு முன்னால் கூடியிருந்த கூட்டத்தை காவல்துறையினர் கலைத்தனர்

நோன்பு பெருநாள் தொழுகையை நடத்த கோலாலம்பூரில் உள்ள தேசிய மசூதிக்கு முன்னால் கூடியிருந்த ஒரு குழுவினரை போலீசார் இன்று கலைத்தனர்.

இந்த குழு இன்று அதிகாலை மசூதிக்கு வெளியே சென்று வழிபாட்டைச் செய்தது.

இருப்பினும், தொழுகைக்கு முன்னர் அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் போது கூடியிருக்க வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்தனர்.

இதற்கிடையில், பச்சை மண்டலத்தின் கீழ் உள்ள தேசிய மசூதி மட்டுமே வெள்ளிக்கிழமை தொழுகை, தாராவி தொழுகை மற்றும் நோன்பு பெருநாள் தொழுகை மேற்கொள்ளும் என்று மலேசியா இஸ்லாமிய துறை (ஜாகீம்) தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தடுப்பு எஸ்ஓபி-யின் ஒரு பகுதியாக, முஸ்லீம் மற்றும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் வளாகத்தின் அளவைப் பொறுத்து அதிகபட்சம் 30 பேர் மட்டுமே நுழைய வரையறுக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல மக்கள் அனுமதிக்கப்படுவதாகவும், இது பல கட்டங்களில் செய்யப்படும் என்றும், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே இப்போது முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடு, SOP-யின் விதிமுறைகள் பின்பற்றுவதைப் பொறுத்தும் மற்றும் நோய்த்தொற்று விகிதங்களை பொறுத்தும், அதிகமான மலேசியர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.