டாக்டர் மகாதீரின் நோன்பு பெருநாள் வாழ்த்து

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுடன் நோன்பு பெருநாளை வரவேற்று கொண்டாடும் மலேசியர்களுக்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் வாழ்த்து கூறிய அதே நேரத்தில், மலேசியாவில் கோவிட்-19 இன் நிலைமை மற்ற நாடுகளைப் போல் மோசமாக இல்லை என்பதற்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைவுபடுத்தினார்.

“இந்த நேரத்தில் நாம் சில கட்டுப்பாடான சூழ்நிலைகளில் நோன்பு பெருநாளை கொண்டாடுகிறோம். அதாவது, எப்போதும் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலரை சென்று பார்த்து கொண்டாடும் சுதந்திரம் இவ்வருடம் இல்லை.”

“நாம் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்றாலும், மலேசியா முழுவதும் நோய் பரவுவதைக் கருத்தில் கொண்டு இது செய்யப்படுகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு என்பது நாம் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கியமான உத்தரவு என்பதை உணர வேண்டும். இல்லையெனில் நோய் அதிகமான மக்களுக்கு பரவும்”.

“அதனால் நாம் சற்று ஏமாற்றமடைந்தாலும், நோயைக் குறைக்க ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம். அடுத்த ஆண்டு வழக்கம் போல் கொண்டாடுவோம்.”

“மற்ற நாடுகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அவர்கள் விதிகளைப் பின்பற்றுவதில்லை, எனவே நோன்பு பெருநாளுக்குப் பிறகு இன்னும் அதிகமானோர் நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது,” என்று அவர் கூறினார்.

“ஆனால் மலேசியாவில், நாம் விதிகளுக்குக் கீழ்ப்படிந்து, அதை பின்பற்றி வருகிறோம்” என்று அவர் கூறினார்.

“உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தொடர்பு கொள்ளுங்கள், கிடைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பார்வைக்கு வெகு தொலைவில் இருந்தாலும் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பார்கள் என நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

நோன்பு பெருநாளை வரவேற்க தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக மாநிலங்களுக்கு இடையில் பயணம் செய்ய தடையை அரசாங்கம் முன்பு அறிவித்தது.

நோன்பு பெருநாள் உபசரிப்பு, முதல் நாளில் மட்டுமே என்றும், ஒரு வீட்டிற்கு அதிகபட்சம் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.