கோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், 42 பேர் குணமடைந்துள்ளனர், இறப்புகள் இல்லை

தொடர்ச்சியான இரண்டு நாட்களுக்குப் பிறகு, இன்று கோவிட்-19 புதிய நோய்த்தொற்றின் எண்ணிக்கை மீண்டும் இரண்டு இலக்கத்திற்கு திரும்பியது.

புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 15 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,619 ஆக உள்ளது என்றும் தெரிவித்தார்.

நண்பகல் நிலவரப்படி, மேலும் 42 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 6,083 பேருக்கு அல்லது 79.8 சதவீதமாக கொண்டு வந்துள்ளது.

செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை இப்போது 1421 ஆக உள்ளது.

டாக்டர் நூர் ஹிஷாம் கூறிய 15 புதிய பாதிப்புகளில் 6 வெளிநாட்டில் ஏற்பட்ட இறக்குமதி தொற்றுகள் என்றார்.

“ஒன்பது உள்ளூர் பாதிப்புகளில், நான்கு மலேசியர் அல்லாத குடிமக்கள் சம்பந்தப்படடவை ஆகும்” என்று அவர் கூறினார்.

டாக்டர் நூர் ஹிஷாம், கோவிட்-19 நோயின் எட்டு நேர்மறை பாதிப்புகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். இவற்றில், நான்கு பாதிப்புகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

“இன்று இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 115, அல்லது மொத்த பாதிப்புகளில் 1.51 சதவிகிதம்” என்று அவர் கூறினார்.