வெட்டுக்கிளிகள் 17 மாநிலங்களுக்கு படையெடுக்கும் அபாயம்

வெட்டுக்கிளி

இந்தியாவில் 17 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகள் பரவுதல் ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்று ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு கூறி உள்ளது.

புதுடெல்லி: ஆப்பிரிக்காவில் இருந்து அரபு நாடுகள், பாகிஸ்தான் வழியாக வடமாநிலங்களுக்குள் புகுந்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவற்றுக்குள் புகுந்துள்ளது.

அடுத்த கட்டமாக கிழக்கு நோக்கி பயணித்து வரும் வெட்டுக்கிளிகள் பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களை நோக்கி பறந்து கொண்டு இருக்கின்றன. ஒரு நாளைக்கு 150 கி.மீட்டர் வரை பயணம் செய்கிறது. அடுத்ததாக தென் மாநிலங்களில் கர்நாடகா வரை பரவும் என்று கணித்துள்ளனர்.

தற்போது பீகாரிலும் ஒரு சில வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன. பக்கத்து நாடுகளான நேபாளம், வங்காள தேசம் வரை அவை பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மொத்தமாக இந்தியாவில் மட்டும் 17 மாநிலங்களில் பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது வந்துள்ள வெட்டுக்கிளிகள் கூட்டத்துக்கு பின்னால் இன்னொரு கூட்டம் வந்து கொண்டு இருக்கிறது. அது, அடுத்த மாதம் மத்தியில் இந்தியாவுக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெட்டுக்கிளிகள் பரவுதல் ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்று ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு கூறி உள்ளது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன.

malaimalar