ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கோரிக்கையை நிறைவேற்றுவேன் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் உடல் தகனம் செய்யப்பட்டது.

நுவரெலியா – நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் ஆறுமுகன் தொண்டமானின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பத்தரமுல்லையிலுள்ள தனது வீட்டில் கடந்த 26ம் தேதி திடீர் சுகயீனமுற்று வீழ்ந்த நிலையில், அவர் இந்த மரணமடைந்தார்.

மாரடைப்பே ஆறுமுகன் தொண்டமானின் உயிரிழப்பிற்கு காரணம் என பிரேத பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது.

ஆறுமுகன் தொண்டமானின் உடல் பத்தரமுல்லையிலுள்ள அவரது வீட்டில் கடந்த 27ஆம் தேதி மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 28ஆம் தேதி நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அவரது உடல் வைக்கப்பட்டதுடன், அரசியல்வாதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அங்கிருந்து கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான அலுவலகமான சௌமிய பவனில் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கிருந்து அடுத்த நாள் இறம்போடையிலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டதுடன், அதற்கு அடுத்த நாள் கொட்டகலையிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அலுவலகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய தினம் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதிக் கிரியைகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஆறுமுகன் தொண்டமானின் உடல் இறம்போடையில் வைக்கப்பட்ட நிலையில், அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த கட்டுப்படுத்த முடியாதளவு மக்கள் ஒன்று திரண்டிருந்தனர்.

இலங்கை கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்றமையினால், நேற்றைய தினம் முழுவதும் நுவரெலியா மாவட்டத்திற்கு ஊரடங்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.

இன்றைய தினமும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால், அனுமதி வழங்கப்பட்டவர்கள் மாத்திரமே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

‘தொண்டமானின் இறுதிக் கோரிக்கையை நிறைவேற்றுவேன்’

ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக தன்னிடம் விடுத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.

இறுதிக் கிரியைகள் நடைபெற்ற மைதானத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே மஹிந்த ராஜபக்ஷ இந்த உறுதியை வழங்கியிருந்தார்.

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலேயே ஆறுமுகன் தொண்டமான் தன்னிடம் இறுதியாக கருத்துக்களை பகிர்ந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட தமிழ் மக்களின் நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனவும், மலையக மக்களின் வீட்டுத் திட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும், கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவுமே தொண்டமான் தன்னிடம் இறுதியாக கோரிக்கை விடுத்ததாக பிரதமர் கூறினார்.

ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக தன்னிடம் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் அமைச்சரவை ஊடாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் இதன்போது உறுதியளித்தார்.

ஆறுமுகன் தொண்டமான் இந்தியாவினதும், தனதும் நண்பர் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தன்னிடம் தெரிவித்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு தொடர்பில் தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியூடாக உரையாற்றிய போதே நரேந்திர மோதி இதனை கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

தமது நாடு தொடர்பில் போலி பிரசாரங்களை செய்து, நிதியுதவிகளை பெற்று நாடாளுமன்ற அதிகாரத்தை பாதுகாப்பதை விடுத்து, தமது பெருந்தோட்டத் தொழிலாளர்களை ரத்தம் சிந்தாமல் பார்த்து கொண்டவர் தொண்டமான் என பிரதமர் தெரிவித்தார்.

BBC