ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: காவல்துறை அதிகாரி மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு – தணியுமா போராட்டங்கள்?

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது புதிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜார்ஜின் மரணத்திற்கு நேரடி காரணமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியான டெரெக் சாவின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது இரண்டாம் நிலை கொலை (திட்டமிடப்படாத கொலை) குற்றச்சாட்டாக மாற்றிமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தின்போது நிகழ்விடத்தில் இருந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாண தலைநகர் மினியாபொலிஸில், மே 25ஆம் தேதி 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல்துறை அதிகாரி சாவின் பிடியில் இருந்தபோது கழுத்து நெறிபட்டு இறந்தார்.

இதன் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அது நாடு தழுவிய போராட்டத்துக்கு வித்திட்டுள்ளது.

புதிய கொலை குற்றச்சாட்டுகளுக்கு என்ன பொருள்?

மின்னசோட்டா மாகாண சட்டப்படி, முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை கொலை குற்றஞ்சாட்டு சுமத்தப்பட்டவர், கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிப்பது அவசியம்.

மூன்றாம் நிலை கொலை குற்றச்சாட்டை பொறுத்தவரை, குற்றம் சுமத்தப்பட்டவர் கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

அதாவது, குற்றஞ்சாட்டப்பட்டவரின் நடவடிக்கைகள் ஆபத்தானவை மற்றும் மனித வாழ்க்கையைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தாலே போதுமானது.

இரண்டாம் நிலை கொலை குற்றம் உறுதிசெய்யப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். இது மூன்றாம் நிலை குற்றச்சாட்டை விட 15 ஆண்டுகள் அதிகமாகும்.

அமெரிக்கா முழுவதும் தொடரும் போராட்டங்கள்

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீது காவல்துறையால் தொடுக்கப்படும் இனவெறி தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும், ஜார்ஜ் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி அந்த நாடு முழுவதும் கடந்த எட்டு நாட்களாக பெரும்பாலும் அமைதியான வழியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், சில இடங்களில் காவல்துறையினரின் வாகனங்களை எரிப்பது, தாக்குவது போன்ற வன்முறை நிகழ்வுகளும் நடந்தேறின.
இந்த புதிய வழக்குப்பதிவுகள் குறித்து அறிவித்த மின்னசோட்டா மாகாண அரசு வழக்கறிஞர் கீத் எல்லிசன், இது நீதியை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றார்.

டெரெக் சயூவின் மீது ஆரம்பத்தில் சுமத்தப்பட்ட மூன்றாம் நிலை கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் தொடருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட மற்ற மூன்று காவல்துறை அதிகாரிகளான தாமஸ் லேன், ஜே அலெக்சாண்டர் குயெங் மற்றும் டூ தாவோ ஆகிய மூவர் மீதும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக இருவேறு குற்றஞ்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஃப்ளாய்ட் குடும்பத்தின் வழக்கறிஞரான பெஞ்சமின் கிரும்ப், “இது நீதிக்கான பாதையில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். ஜார்ஜ் ஃப்ளாய்டின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் இந்த முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பின்னர் சி.என்.என். தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வழக்கறிஞர் பெஞ்சமின், டெரெக் மீதான குற்றச்சாட்டு முதல் நிலை கொலை என்று குடும்பத்தினர் நம்புவதாகவும், விசாரணை நடந்து கொண்டிருப்பதால், குற்றச்சாட்டுகள் மேலும் மாறக்கூடும் என்று அவர்களிடம் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க போராட்டங்களின் நிலை என்ன?

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, அமைதிவழி போராட்டங்களில் சமூக விரோதிகள் நுழைந்து போராட்டத்தை திசைதிருப்ப கூடும் என்பதால் அங்குள்ள பெரும்பாலான நகரங்களில் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நேற்றிரவு பெரும்பாலும் குறைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மாகாணங்களுக்கும், நகரங்களுக்கும் ராணுவத்தை அனுப்ப வழிவகை செய்யும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை பயன்படுத்தலாம் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆலோசனையை தான் ஏற்கவில்லை என்று அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் எஸ்பெர் கூறுகிறார்.

எனினும், இதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர், வாஷிங்டன் நகரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரை திரும்ப பெறும் முடிவிலிருந்து மார்க் பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு வழக்கறிஞர் என்ன கூறினார்?

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் மின்னசோட்டா மாகாண அரசு வழக்கறிஞர் எல்லிசன், அதில் தெளிவான சவால்கள் இருப்பதை வரலாறு காட்டுவதாக கூறுகிறார்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் “அவரது குடும்பத்தினரால் நேசிக்கப்பட்டார், அவரது வாழ்க்கைக்கு மதிப்பு இருந்தது” என்றும் “நாங்கள் உங்களுக்காக நீதியைத் தேடுவோம், அதைக் கண்டுபிடிப்போம்” என்றும் எல்லிசன் கூறினார்.

சமுதாயத்திற்கு நீதியைக் கொண்டுவருவது அடிப்படையில் மெதுவான மற்றும் கடினமான வேலையாக இருக்கும் என்றும், அந்த வேலையைத் தொடங்க அமெரிக்கர்கள் ஃப்ளாய்ட் வழக்கின் முடிவுவரை காத்திருக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.
“ஒரு நியாயமான சமுதாயத்திற்கான விதிகளை நாம் இப்போது மீண்டும் எழுத வேண்டும்” என்று மேலும் அவர் கூறினார்.

மின்னசோடாவை பொறுத்தவரை, இதுவரை ஒரேயொரு காவல்துறை அதிகாரி மீது மட்டுமே பணியில் இருக்கும்போது குடிமகன் ஒருவரை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்டு: 8 நிமிடம், 46 நொடிகள் – நடந்தது என்ன?

கொரோனா வைரஸால் உலகிலேயே மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். 18 லட்சம் பேர் நோயால் அவுதியுற்றுள்ளார்கள். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். பொருளாதாரம் முடங்கிப்போயிருக்கிறது.

ஆனால் போலீஸ் பிடியில் இருந்த ஒரு கறுப்பின நபர் இறந்த பின் அமெரிக்காவின் பெரும்பகுதி பற்றி எரிய தொடங்கியிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் மிகப்பெரிய சீற்றம் உருவாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பதுங்கு குழிக்குள் செலவழித்துள்ளார். என்ன தான் நடக்கிறது அமெரிக்காவில்?

I Can’t Breathe

என்னால் மூச்சுவிடமுடியவில்லை! ஒரு போலீஸ் அதிகாரி தனது கழுத்தில் காலை வைத்து நெரிக்கும்போது ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டு பரிதாபமாக அலறினார். ஆனால் எதையும் காதில் வாங்காத அந்த வெள்ளையின போலீஸ் தொடர்ந்து அழுத்த, ஃபிளாய்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம்தான் தற்போது அமெரிக்காவே வன்முறையால் பற்றி எரிவதற்கு காரணம். கடந்த மே மாதம் 25-ம் தேதி அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாணத்தின் மின்னியாபொலிஸ் நகரத்தில் 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்டு Cup Foods எனும் கடையில் சிகரெட் வாங்கச் சென்றுள்ளார்.

அவர் கொடுத்த 20 டாலர் நோட்டு போலியானது என அந்த கடையின் பதின்மவயது ஊழியர் சந்தேகித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறைக்கு ஃபோன் செய்து புகார் கொடுத்திருக்கிறார். 911 என்ற எண்ணுக்கு அவர் ஃபோன் செய்து என்ன சொன்னார் என்பது தற்போது எழுத்து வடிவமாகவே அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அந்த பதின்ம வயது ஊழியர், ஜார்ஜ் குடித்திருப்பது போல தெரிவதாகவும், அவர் கட்டுப்பாட்டிலேயே இல்லை என தெரிவித்திருக்கிறார்.

அடுத்த ஏழு நிமிடங்களில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் அங்கே வந்துவிட்டார்கள். ஒரு மூலையில் காரை பார்க் செய்துவிட்டு அதனுள் இருவருடன் உட்கார்ந்திருந்தார் ஃஜார்ஜ்.

காரை சென்றடைந்த அதிகாரிகளில் ஒருவரான தாமஸ் லென் தனது துப்பாக்கியை எடுத்து நீட்டி ஃப்ளாயிடை கையை நீட்டுமாறு சொல்கிறார். அந்த சமயத்தில் அவர் ஏன் தேவையில்லாமல் துப்பாக்கியை எடுத்து நீட்டினார் என்பது இன்னும் விளக்கப்படவில்லை.

கள்ளநோட்டு பரிமாறியதாகச் சொல்லி, காரை விட்டு இறங்க மறுத்த அவரை கை விலங்கிட்டது போலீஸ். பொது இடத்தில் நடந்த சம்பத்தால் உச்சகட்ட பயமும், ஒருவித எரிச்சலும் அடைந்த நிலையில் கீழே விழுந்தார் ஜார்ஜ். தனக்கு claustrophobic பாதிப்பு இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றும் முயற்சியில் டெரெக் சாவின் எனும் அதிகாரியும் களமிறங்கினார். அப்போது கீழே விழுந்த ஃபிளாய்ட் சந்தித்த மோசமான நிமிடங்களை பலர் தங்களது மொபைலில் பதிவு செய்தனர். 44 வயதாகும் டெரெக் சாவின் தனது இடது கால் முட்டியை ஜார்ஜின் தலைக்கும் கழுத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அழுத்தினார். “I can’t breathe,” “please, please, please” என ஜார்ஜ் அலறினார். எட்டு நிமிடங்கள் 46 நொடிகள் தனது காலை வைத்து அழுத்தினார் ஜார்ஜ். ஆறு நிமிடங்கள் முடிந்த போதே ஜார்ஜ் மூர்ச்சையாகிவிட்டார். அவரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்பது வீடியோவில் தெரிந்தது. அங்கே சென்றுகொண்டிருந்தவர்கள் ஜார்ஜின் நாடித்துடிப்பை சோதிக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

ஒரு அதிகாரி ஃபிளாய்டின் வலது மணிக்கட்டில் நாடித்துடிப்பை சோதனை செய்ய, அதன் பின்னர் சாவின் தனது முட்டியை எடுத்தார். ஆம்புலன்ஸ் மூலம் ஜார்ஜ் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட, ஒரு மணி நேரத்துக்கு பின் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

யார் இந்த ஜார்ஜ் ஃபிளாய்டு?

டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்த ஜார்ஜ் பல ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்புக்காக மின்னியாபோலிஸ் நகருக்கு வந்துவிட்டார். அந்த நகரில் சமீபகாலமாக ஒரு பௌன்சராக வேலை செய்துவந்தார். தற்போது பல லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனாவால் வேலையின்றி தவிப்பது போலவே ஜார்ஜுக்கும் வருமானமில்லை.

அவர் கப் ஃபுட்ஸ் கடைக்கு அடிக்கடி வருபவர். ஒரு நண்பரை போன்ற முகத்துடன் சிரித்து பேசக்கூடிய, எந்தவித தீங்கும் விளைவிக்காத நபர் அவர் என்கிறார் அந்த கடையின் முதலாளி மைக் அபுமேயல்லா.

சம்பவ தினத்தன்று அமுபேயல்லா தனது கடையில் இல்லை என்கிறார். தனது ஊழியர் சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு தொடர்பு கொண்டதாகக் கூறுகிறார்.

BBC.TAMIL