பசார் போரோங் காய்கறி சந்தையில் வேலை வாய்ப்பு – எதிர்கால தொழில் முனைவராக வாய்ப்பு!

இராகவன் கருப்பையா – நமது வாழ்க்கையில் எத்தகைய சிரமமான சூழ்நிலைகளை நாம் எதிர்நோக்கினாலும் அவைகளுக்குப் பின்னால் சில வாய்ப்புகளும் ஒளிந்திருக்கும் என்பது இயற்கையின் நியதி. இதைத்தான் ‘ஒப்பச்சினிட்டி இன் டிஃபிக்கல்ட்டி’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

கோவிட்-19 தொற்று நோயினால் நம் நாட்டில் பல துறைகள் மீண்டெழ முடியாத அளவுக்கு படுவீழ்ச்சி கண்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இருந்த போதிலும் நிகழ்நிலை வியாபாரம் சம்பந்தப்பட்ட பல தொழில்கள் இத்தருணத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதை நாம் மறுப்பதற்கில்லை.

அதே வேளை, இதுநாள் வரையில் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் ஆக்கிரமித்து வந்த ஒருசில துறைகளில் தற்போது உள்நாட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமைந்துள்ளதையும் நாம் காணமுடிகிறது.

அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளைப்போல் மிக மோசமாக இல்லாவிட்டாலும் மலேசியாவில் இதுவரையில் 8,000கும் மேற்பட்டோர் கோவிட்-19 கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கணிசமான அளவு சட்டவிரோதம் குடியேற்ற வாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களால் பல்லாண்டு காலமாக பலதரப்பட்ட சமூகப் பிரச்னைகள் இருந்து வந்துள்ள போதிலும் இந்தத் தொற்று நோயின் வழி அவர்களால் நாம் அடைந்துள்ள பாதிப்பின் தாக்கம் சற்று அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘பொருத்தது போதும், பொங்கி எழுவோம்’ என்ற நிலையில் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் இம்முறை மேற்கொண்டுள்ள பல கடுமையான நடவடிக்கைகளினால் சில அத்தியாவசியத் துறைகளில், குறிப்பாக சந்தைகளில் ஆயிரக்கணக்கான உள் நாட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளது ஒரு நல்ல விசயம்.

அவற்றுள் குறிப்பிடத்தக்கது செலாயாங்கில் உள்ள பாசார் போரோங் மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள சந்தை.

செலாயாங் பாசார் போரோங்கில் மியன்மார் நாட்டவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த வேளையில், பெட்டாலிங் ஜெயா சந்தையில் இந்திய மற்றும் வங்காள தேச கள்ளக் குடியேற்றவாசிகள் மலிந்து கிடந்தனர்.

இவ்விரு சந்தைகளுமே நடமாட்டக் கட்டுப்பாட்டுக்குப் பிறகு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான காலியிடங்களுக்கு உள்நாட்டுவாசிகள் அழைக்கப்படுகின்றனர்.

வேலையில்லாமல் அவதிப்படும் நம் இளைஞர்களுக்கும் இது அரியதோர் வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

மாதம் ஒன்றுக்கு குறைந்த பட்சம் சராசரி 2 ஆயிரம் ரிங்கிட் சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இரவு பகல் சிரமம் பாராது உழைத்தால் பிற்காலத்தில் இத்துறையில் பெரிய தொழிலதிபர்களாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு என உறுதியாக சொல்லலாம். ஏனென்றால் இப்போது முதலாளிகளாக உள்ளவர்களில் பெரும்பாலோர் இப்படித்தான் தங்களுடைய   வெற்றிப் பயணத்தை தொடக்கியுள்ளனர் என்பது வெள்ளிடை மலை.

எம்மாதிரியான சூழ்நிலையிலும் உணவுக்கான தேவைகள் இருந்துகோண்டே இருக்கும். எனவேதான் இத்துறையின் பிரகாசமான எதிர்காலம் குறித்து எள்ளளவும் யாரும் ஐயப்பாடுகொள்ள வேண்டிய அவசியமில்லை.

இதற்கிடையே உள்நாட்டு இளைஞர்கள் இந்த காலியிடங்களை கையிலெடுக்கும் விசயத்தில் அரசாங்கம் முக்கியப் பங்காற்ற வேண்டியுள்ளது.

இதர துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளைப்போல் இவர்களுக்கும் ஊழியர் சேமநிதி, வேலையிட பாதுகாப்பு, சம்பள உயர்வு மற்றும் மிகுதி நேர ஊதியம் போன்ற சலுகைகள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும்’ என்பதற்கு ஏற்ப, நம் சமூகத்தில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் இந்த சந்தர்ப்பத்தை அமுதென பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முதல் படியாக இதனைக் கருத வேண்டும்.