காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்- இந்தியா பதிலடி

எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்

லடாக்கில் இந்திய வீரர்களை சீன ராணுவம் தாக்கிய நிலையில், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு ஜம்மு காஷ்மீரின் நவ்காம் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் குண்டுகள் மூலம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த தாக்குதலில் ஏதேனும் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

நேற்று முன்தினம் லடாக் எல்லையில் சீன ராணுவம் இந்திய ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவமும் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது.

கடந்த சில மாதங்களாக இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் ஜூன் 10ம் தேதி வரை 2027 முறை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

malaimalar