தமிழ்ப்பள்ளிகளில் சரிந்துவரும் மாணவர் எண்ணிக்கையைச் சரி செய்வது எப்படி? ~ குமரன் வேலு

2019-இன் தரவுகள் :

ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு ஈறாக, மொத்தப் பள்ளிகள் : 525

(அரசு பள்ளிகள் :  160 & அரசு உதவி பெறும் பள்ளிகள் : 365)

30 மாணவருக்கும் குறைவான பள்ளிகள் : 120

30-150 மாணவர்கள் கொண்ட பள்ளிகள் : 245

150 மாணவருக்கும் அதிகமான பள்ளிகள்      : 160

மொத்த மாணவர்கள் : 81,420

மழலையர்ப் பள்ளி மாணவர்கள் :  6647

மலேசியத் தமிழ்பள்ளிகளின் வரலாற்றில், 2009-ல் மட்டுமே 109,086 மாணவர்கள் படித்தார்கள். மற்றெந்த ஆண்டை விடவும், இதுவே ஆகப்பெரிய எண்ணிக்கை. கடந்த சில ஆண்டுகளாக சற்றேறக்குறைய 80,000 சொச்சம் மாணவர்கள் மட்டுமே தமிழ்ப்பள்ளியில் படித்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் பதிவாகி வருகின்றன.

2002-ல், 89,195 மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் பயின்றார்கள். அப்பொழுது இருமொழி பாடத்திட்டம் இல்லை.

2003-ல், PPSMI எனப்படும் அறிவியல் கணிதம் ஆகிய இருபாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் திட்டம் அறிமுகமானது. அதுமுதல் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, 2009-ல் 109,086 ஆக அதிகரித்தது. அதன் பின் மாணவர் எண்ணிக்கையில் சரிவு ஏற்படத் தொடங்கியது.

2002-ம் ஆண்டையும் 2009-ம் ஆண்டையும் ஒப்பிட்டால், ஏறத்தாழ 20,000 மாணவர்கள் PPSMI அறிமுகம் ஆனதற்குப் பிறகு, தமிழ்ப்பள்ளிகளில் இணைந்தார்கள் என்று கொள்ளலாம். PPSMI இல்லாமல் இருந்திருந்தால், இவர்கள் எல்லோரும் தேசியப் பள்ளியிலோ, சீனப்பள்ளியிலோ பதிந்திருப்பர்.

தமிழ்ப் பள்ளியா மற்ற பள்ளியா என்று ஊசலாடும் பெற்றோர்கள், மதில்மேல் பூனைப் போன்றவர்கள். சூழலுக்கு ஏற்றார்போன்று மாறுவார்கள்.

ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்ப்பள்ளி மட்டுமே தன் தேர்வு, தமிழ்க்கல்விக்கே முன்னுரிமை என்று தமிழ்ப்பள்ளிகளை வாழவவைத்துக் கொண்டிருக்கும் 80,000 மாணவர்களின் பெற்றோர்கள் இன்னும் இருக்கின்றார்கள். இவர்கள்தான் தமிழ்ப்பள்ளியின் விசுவாசமான நிரந்தர வாடிக்கையாளர்கள்.

இந்த 80,000 நிரந்தர வாடிக்கையாளர்கள் வைப்பகத்தில் உள்ள வைப்புத்தொகை போன்றவர்கள். தமிழ்ப்பள்ளிகள் எவ்வாறு இவர்களைத் தக்க வைத்துக் கொள்வது என்று சிந்திக்க வேண்டும்.

தற்போது, சீன – தேசியப் பள்ளிகளில் பயிலும் ஒரு 80,000 இந்திய மாணவர்களில் பாதியை எதிர்வரும் காலங்களில் தமிழ்ப்பள்ளிகள் பக்கம் திருப்ப நாம் முயற்சி செய்யலாம். இன்னொரு பாதி, நாம் எப்படித்தான் குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழ்ப்பள்ளிப் பக்கம் தலைவைத்தும் படுக்க மாட்டார்கள். அது தமிழ்க் கல்வியை எதிர்க்கின்ற மேட்டுக்குடி கூட்டம்.

எவ்வாறு மாணவர் எண்ணிக்கைச் சரிவை சரிசெய்வது?

இதற்கு குறுகிய காலத் திட்டம் ( 1-3 ஆண்டுகள்), நீண்டகால திட்டம் ( 5-10 ஆண்டுகள்)  இரண்டும் தேவைப்படுகிறது.

குறுகிய காலத்திட்டம் :

திட்டங்கள் எல்லாவற்றையும் மூவகைக்குள் அடக்கலாம்:

அ) தடுப்பு (preventive)

ஆ) குறைநீக்கம் (corrective)

இ) முன்னேற்றம் (improvement)

 

திட்டம் 1 (பாலர் பள்ளி)

இந்தியர் குடியிருப்புகள், தமிழ்ப்பள்ளிகள் எல்லாவற்றிலும் பாலர் பள்ளிகள் அமைத்து தரமான கல்வியை வழங்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அங்குப் பாடங்களுடன், நுண்கலை/ மென் திறன்களையும் (soft skills) கற்றுத் தரவேண்டும்.

குழந்தைகளுக்கு:

  1. தொடர்பாடல் திறன்
  2. தலைமைத்துவ திறன்
  3. கணினி திறன்
  4. வரையும்/ ஓவியத் திறன்
  5. சிந்தனைத் திறன்
  6. விரைந்து கற்கும் திறன்
  7. பேச்சுத் திறன்
  8. நயவுறவும் பேச்சுவார்த்தைத் திறன் (Diplomacy & negotiation)
  9. நடனம் & இசைக்கருவி வாசிக்கும் & பாடல் திறன்
  10. பன்மொழித் திறன்
  11. நேர நிருவாகத் திறன்
  12. நெறி ஒழுகும் திறன் (protocol& ethics)

குழந்தைகளுக்கு இவையெல்லாம் கற்றுக்கொடுக்க முடியுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எளிமைப்படுத்தி அனுபவரீதியாக (practical) சொல்லித் தரப்பட வேண்டும்.

இன்னும் பல எதிர்கால சவால்களைச் சமாளிக்கும் திறன்களைப் பாலர்பள்ளியில் இருந்தேக் கற்றுக்கொடுக்க வேண்டும். தொடக்கக்கல்விக்குத் தயார் செய்யும் வகையில் தரமான பாலர்ப்பள்ளி கல்வி அவசியமாகிறது.  மாணவர்களுக்கு விளையாட்டின் வழி கல்வி வழங்கப்பட்டால் அவர்களுக்கு அந்தச் சுமை தெரியாது.

“தமிழ்ப்பள்ளியில் பாலர்ப்பள்ளி இல்லை. என் குழந்தை மலாய் / சீன பாலர்ப் பள்ளியில் படிக்கின்றான். அதனால், தமிழ்ப்பள்ளியில் என் குழந்தையைப் பதிய மாட்டேன்.”

– பெற்றோர்களில் ஒருவர் கூறியது

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் பதியும் மாணவர் எண்ணிக்கை சராசரியாக 13,000 பேர். இவர்களில் சராசரியாக 6000 மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில், பாலர் பள்ளியில் பயின்றவர்கள்.

ஒரு 13,000 பேர் தேசியப் பள்ளியிலும் சீனப்பள்ளியிலும் முதலாம் ஆண்டில் பதிகின்றார்கள். இவர்களை ஆய்வு செய்தபோது, நமக்கு கிடைத்த தகவல்களில், தேசிய – சீனப் பாலர்ப்பள்ளியில் படித்ததால் இவர்கள் தமிழ்ப் பள்ளியைத் தவிர்ப்பதாக தெரிய வந்தது.

தமிழ்ப் பாலர்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளுக்கான நிரந்தர வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் ஓர் அமைப்பு. மேலும், கல்வித்தரம் சிறப்பாக இருந்தால், தமிழ்ப்பாலர் பள்ளியை நோக்கி, ‘கல்வித்தரம்’ விரும்பும் வாடிக்கையாளர் கூட்டத்தினர் படையெடுப்பார்கள்.

இந்தியர்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் கருதி செயல்படும் மித்ரா (MITRA), ஒரு தேசியப் பேரிடர்போல் கருதி, தமிழ்ப் பாலர்பள்ளிகளை விரைந்து அமைக்கவேண்டும். தமிழ்ப்பாலர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தேவையான பொருள் வசதிகளை, கூடுதல் திறன்களைக் கற்பதற்கு, அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் தமிழ்மொழி, தமிழ்சார்ந்த சமய, சமூக இயக்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது சமுதாயத்தின் நலன்கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டம்.

தமிழ்ப் பாலர் வகுப்புகள் எல்லாத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலும் கண்டிப்பாக அமைய வேண்டும்.

இன்றைய நிலைமை

மொத்தப் பள்ளிகள்:  525

பாலர் வகுப்புகள் உள்ள பள்ளிகள் : ~ 300 (சரியான தரவு இன்னும் கிட்டவில்லை)

மாணவரை மற்ற பள்ளிகளுக்குச் செல்லவொட்டாமல் தடுப்பதால், இது ஒரு தடுப்பு திட்டம் (preventive).

மேலும், பாலர்ப்பள்ளியின் கல்வியைத் தரம் உயர்த்தும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால், இது ஒரு மேம்படுத்தும் திட்டம் (improvement).

திட்டம் 2 (இணைக்கட்டிடம்)

அதிகரித்துவரும் மாணவர் எண்ணிக்கையைச் சமாளிக்க, நகர்ப்புறத் தமிழ்ப்பள்ளிகளில் புதிய இணைக்கட்டிடங்கள் எழுப்பப்பட வேண்டும்.

“சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் இடமில்லை. அதனால் சிம்பாங் லீமா தேசியப் பள்ளியில் பதிந்துவிட்டேன்”

– ஒரு பெற்றோர்.

‘நகர்புறத் தமிழ்ப்பள்ளிகளில் இடப்பற்றாக்குறை காரணமாக நெருக்கிக்கொண்டு படிக்கின்றனர் மாணவர்கள்’ என்ற புகார்கள் வருகின்றன. புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள போதுமான இடவசதி இல்லை. இதனால், பெற்றோர்கள் தேசியப் பள்ளியை நாடுவதாகத் தகவல் வருகிறது.

மலேசிய நடுவண் அரசின் நிதியில், கடந்த 2018-ல், 50 மில்லியன் தொகையும், 2019-ல் 50 மில்லியனும் தமிழ்ப்பள்ளிகளைப் பராமரிக்கும் செலவுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்தத் தொகை, பள்ளியில் வகுப்பறைகளைப் பழுது பார்க்கவும், கூரையின் ஓட்டை ஒடிசல்களைச் சரிசெய்யவும், மின்வசதிகளை மேம்படுத்தவும், வகுப்பறைத் தளவாடங்களை மேம்படுத்தவும், சிறப்பு அறைகளை மேம்படுத்துவும், பள்ளியை அழகுபடுத்தவும், பள்ளி வேலி அல்லது மதில் சுவர்களை ஒழுங்கு செய்யவும், சிமிந்து தரைகளுக்குப் பளிங்குக் கல்பதிக்கவும் செலவிடப்படலாம் என்று கல்வியமைச்சின் சுற்றறிக்கை குறிப்பிடுகிறது. 50 மில்லியன் ரிங்கிட் நிதியை 525 பள்ளிகளுக்குத் தேவையின் அடிப்படையில் பிரித்து வழங்கும் பணியைக் கல்வித் துணையமைச்சரின் அலுவலகம் செய்து வருகிறது. அந்த நிதியைக் கல்வியமைச்சின் நிதி நிருவாகப் பிரிவு பள்ளியின் வைப்பகக் கணக்கிலோ அல்லது பள்ளி மேலாளர் வாரியக் கணக்கிலோ சேர்க்கிறது.

வழங்கப்படும் தொகையை எப்படி செலவு செய்வது என்று தத்தளிக்கும் பள்ளிகளும் உண்டு. வழிகாட்டுகிறோம் என்று மாவட்டக் கல்வித்துறையின் அதிகாரக் குறுக்கீடுகளும் உண்டு.

போர்க்கால அடிப்படையில், இந்த 50 மில்லியன் ரிங்கிட்டை முதலில் இணைக்கட்டிடம் கட்டும் முயற்சிகளுக்குச் செலவிடலாம். எங்குத் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கின்றதோ, அங்கு இணைக்கட்டிடம் முதன்மை அவசியமாகிறது. ஆனால் நகர்புறப் பள்ளிகளில் இணைக்கட்டிடம் கட்ட நிலம் கிடைப்பது சிக்கலாக இருக்கும். வேறு வழியில்லை, கட்டித்தான் ஆகவேண்டும்.

இதை ஓராண்டில் தாராளமாகச் செய்து முடித்து விடலாம். நமது இனக் குத்தகையாளர்கள் பயனடையும் வண்ணம் திட்டங்கள் அமைய வேண்டும்.

இணைக்கட்டம் கட்டினால், புதிய மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.  இதன்வழி, இடப்பற்றாக்குறை காரணமாகத் தேசியப் பள்ளிகளுக்குச் செல்லும் கணிசமான இந்தியர்களைத் தமிழ்ப்பள்ளி பக்கம் திருப்பலாம்.

தமிழ்ப்பள்ளிகளைப் புறக்கணித்து வேறு பள்ளிகளுக்குச் செல்லும் பெற்றொரைத் தடுக்கும் முயற்சி என்பதால் இது ஒரு ‘தடுப்பு திட்டம்’ எனலாம்

திட்டம் 3 (ஆங்கில மொழி, மலாய்மொழி, கணிதம், அறிவியல், உலக மொழிகள்)

ஆங்கில மொழி, மலாய்மொழி, கணிதம், அறிவியல் பாடங்களின் அடைவு நிலையைத் தமிழ்ப் பள்ளிகளில் உயர்த்தும் திட்டம் வேண்டும்.

குறிப்பாக, ஆங்கில மொழியின் மீது மோகம் கொண்டிருக்கும் இந்தியர்கள் நம்மிடையே அதிகம் பேர் இருக்கின்றார்கள். ஆங்கிலம் அறிவு மொழி, வேலை வாய்ப்பு மொழி, கல்வி மொழி என்பதால் அவர்கள் ஆங்கிலத்தை வாழ்வாதார மொழியாகக் காண்கின்றனர்.

வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு போய், 60 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.  கான்வண்ட் பள்ளிகளில் இன்னும் ஆங்கிலம் சிறப்பாக பேசப்படுகிறது என்றும், இன்னும் பழைய ஆங்கில நினைவுகளில் காலம்தள்ளும் இந்தியர்கள், தேசிய மொழிப் பள்ளிகளில் ஆங்கிலம் சிறப்பாக கற்றுக்கொடுக்கப்படுகிறது என்றும், ஆங்கிலப் பெயர்கள் கொண்ட தேசியப்பள்ளிகளில் ஆங்கிலம் முதன்மை மொழியாக இருப்பதாகவும், அங்கே தங்கள் பிள்ளைகள் படிப்பது கவுரவம் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஜொகூர், குளுவாங் நகரில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட ஒரு தமிழ்ப்பள்ளியும் கனோசன் காண்வண்ட் தேசியப் பள்ளியும் ஆறேழு கி.மீ இடைவெளியில் இருக்கின்றன. தமிழ்ப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர் எண்ணிக்கையை விடவும் காண்வண்ட் பள்ளியில் பயிலும் இந்திய மாணவரின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிய வருகிறது.

காண்வண்ட் என்ற பெயரின் மீது இந்தியர்களுக்கு அப்படி ஒரு மோகம் இருக்கிறது. காண்வண்ட் போன்ற ஆங்கிலப்பெயர் கொண்ட தேசியப் பள்ளிகளில் கல்வித்தரம், குறிப்பாக ஆங்கிலத்தரம் தமிழ்ப்பள்ளியை விடவும் அதிகம் என்று நம்மக்கள் நம்புகின்றனர்.

தமிழ்ப்பள்ளிகளில் ஆங்கில மொழியில் பேசும், எழுதும் திறன் உயர, நாம் வழிகாண வேண்டும். இது மலாய் மொழிக்கும் பொருந்தும். தமிழ்ப்பள்ளியிலும் தேசியப் பள்ளியிலும் வெவ்வேறான மலாய்மொழி கலைத்திட்டம் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்ப்பள்ளியின் மலாய்மொழி கலைத்திட்டம் தேசியப் பள்ளியின் கலைத்திட்டத்தை விடவும் எளிமையானது அல்லது அடர்த்திக் குறைவானது என்று கூறப்படுகிறது.

என்னதான் ஆறாம் ஆண்டு தேர்வில் 8A-க்கள் பெற்றிருந்தாலும், தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவருக்கு முழுநேர அரசாங்கத்தின் உறைவிடப் பள்ளிகளில் (Sekolah Berasrama Penuh KPM) முதல் படிவம் செல்லும் வாய்ப்பு அறவே இல்லை. ஆனால், தேசியப் பள்ளியில் படித்த இந்திய மாணவருக்கு அந்த வாய்ப்பு தரப்படுகிறது.

என்ன காரணம் தெரியுமா?

தமிழ்ப்பள்ளிகளில் அல்லது சீனப்பள்ளிகளில் மலாய்மொழியின் தரம் குறைவாக இருக்கிறது என்று சாக்குபோக்கு சொல்லப் படுகிறது.

ஆகவே, தமிழ்ப்பள்ளிகளில் மலாய்மொழி, ஆங்கில மொழியின் தரம் உடனடியாக உயர்த்தப்பட வேண்டும். எப்படி?

இந்தக் கடமையை ஆசிரியரிடம் மட்டும் விட்டு விட்டு சமூகம் ஒதுக்கிக் கொள்ளக் கூடாது.

தமிழ்பள்ளிகளில் ஆங்கிலம் / மலாய் முதன்மை மொழியாகப் படித்த ஆசிரியர்கள் குறைவு. தமிழாசிரியர்களே முயன்று சிறப்பாக ஆங்கிலம் / மலாய் படித்துக்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும், இது போதாது.

சமூக இயக்கங்கள் தமிழ்ப்பள்ளி மாணவரின் ஆங்கில மொழி / மலாய் மொழி வளர்ச்சிக்கு உதவ வேண்டும். வெளியில் இருந்து ஆங்கில மொழி / மலாய்மொழி வல்லுநர்களைக் கொண்டு வந்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி வழங்க வேண்டும். குறிப்பாக, ஏழை மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்க வேண்டும். 21 நாள் ஆங்கில / மலாய்மொழி பாசறைகள் விடுமுறை காலங்களில் நாடு தழுவிய நிலையில் நடைபெற வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், வாரியங்கள், கல்வி இயக்கங்கள் இந்தத் திட்டதிற்கான செலவை ஏற்க வேண்டும்.

ஆறு ஆண்டுகள் முடிவதற்குள், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம்/ மலாய் மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

திறமையான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மலாய்ப்பள்ளிகளுக்கான மலாய்மொழி தேர்வுத் தாளை எழுத வாய்ப்பு வழங்க வேண்டும்.

தேசியப் பள்ளிகள் சிலவற்றில் பிரஞ்சு, செர்மன், சப்பான் மொழிகளைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. தமிழ்ப்பள்ளிகள் அந்த நிலையை உருவாக்க வேண்டும். அரசாங்கம் செய்துதரும் என்று காத்திருக்கக் கூடாது. அடிப்படை சீன மொழியையும் தமிழ்ப்பள்ளியில் விருப்பப்படும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் முனையலாம்.

இவை, தேசியமொழிப் பள்ளிக்கு ஓடும் பெற்றோரைத் தமிழ்ப்பள்ளிப் பக்கம் திருப்பும் திட்டங்களாகும்.

தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு என்பதற்கு இவை எல்லாம் காரணமாக அமையும்.

மேலும், உலகளாவிய கணித, அறிவியல் போட்டிகளில் நம் மாணவர்கள் வெற்றிப் பெற்று, அந்தச் செய்திகள் ஆங்கில மலாய் ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிவர வேண்டும்.

பன்னாட்டு அறிவியல் புத்தாக்கப் போட்டிகளில் நம் மாணவர்கள் முத்திரை பதித்து வருகின்றார்கள். அந்த வாய்ப்பு எல்லாத் தமிழ்ப்பள்ளிக்கும் போய் சேரவேண்டும். ‘அஸ்தி’ எனும் இயக்கம் பயிற்சிகளைத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இன்னும் வளர வாழ்த்துவோம். இவையெல்லாம் அறிவியல் திறனை மாணவரிடையே உயர்த்தும்.

ஒவ்வோர் ஆண்டும், ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் நம் மாணவர்கள் பங்கெடுக்கக் கணித வல்லுநர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்க வேண்டும்.

இவையெல்லாம் தரம் உயர்த்தும் திட்டங்கள் (improvement).

தமிழ்ப்பள்ளிகளில் காலத்திற்கு ஏற்றவாறு தரம் உயர்த்துதல் நடைபெற வேண்டும். தரமான தமிழ்ப்பள்ளியை நாடி பெற்றோர் தானாகவே வருவர்.

எல்லாம் சரி. ஆனால், இவையெல்லாம் தமிழ்ப்பள்ளிகளின் அடையாளத்தை அழித்துவிடாமல் நடைபெற வேண்டும். குழியை மூடுகிறேன் என்று பள்ளத்தில் விழுந்து விடக் கூடாது. புரிந்தவர்களுக்கு இது புரியும்.

நீண்ட காலத் திட்டம்

திட்டம் 1 (புதியப் பள்ளிகள்)

அ. இட மாற்றம்

தோட்டப் புறப் பள்ளிகளை இந்தியர்கள் அதிகம் வாழும் நகர்புறங்களுக்கு இடமாற்றம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றாலும், தடைகற்கள் பல உள்ளன. இடம்மாற்றம் செய்ய தோதான அரசு நிலம் நகரங்களில் அடையாளம் காட்டப்பட வேண்டும். 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிந்து படிக்கக் கூடிய நிலை இருக்க வேண்டும். இவையெல்லாம் சாத்தியமே என்றாலும், நீண்ட நாட்கள் பிடிக்கும். அரசின் நிதிநிலைமையைப் பொருத்தே இது சாத்தியமாகும். இப்போதுள்ள நிலையில், பல வசதிகளுடன் கூடிய ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு 20 மில்லியன் ரிங்கிட் தேவைப்படும்.

கிள்ளான் நகரும் அதன் சுற்று வட்டாரமும் அதிகமான இந்திய மாணவர்கள் கொண்ட பகுதி. புதியப் பள்ளிகள் கட்டப்பட்டால், புதியத் தமிழ்ப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். மற்ற தமிழ்ப்பள்ளிகளில் நெரிசல் குறையும்.

ஆ. தங்கிப் படிக்கும் பள்ளிகள்

ஏழை மாணவர்கள் தங்கிப் படிக்கும் உறைவிடப் பள்ளிகள் கட்டுவதற்குச் சில ஆண்டுகள் பிடிக்கும். முறையான திட்டமிடல், அரசியல் ஆதரவு போன்றவை தேவைப்படும். அரசின் கொள்கைகள் நெகிழ்வுத் தன்மைமிக்கதாய் இல்லை என்பது கடந்த கால அனுபவம் கூறும் உண்மை. ஆயினும், புதிய மலேசியாவில் இது சாத்தியமே. குறைவான மாணவர் எண்ணிக்கைக் கொண்ட பள்ளிகள் சிலவற்றைத் தங்கிப் படிக்கும் பள்ளிகளாக தரம் உயர்த்தலாம். இந்தப் பள்ளிகளில் விளையாட்டுத் துறை மாணவர்களையும் இணைத்துக் கொள்ளலாம்.  இது, மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க உதவி செய்யும்.

இ. தமிழ் இடைநிலைப் பள்ளிகள்

தமிழ் இடைநிலைப் பள்ளி, தமிழ்க்கல்வியின் தொடர்ச்சிக்கு உதவியாய் இருக்கும். அரசாங்கத்தின் கலைத்திட்டத்தைக் கொண்டும், பயிற்று மொழியாக மலாய்மொழியும் இருக்கும் பட்சத்தில் அரசின் முழு உதவிப்பெறும் பள்ளியாக விளங்கும். தமிழர் ஒருவர் முதல்வராகவும், பெருவாரியான ஆசிரியர்கள் இந்தியராக இருக்கும் வாய்ப்பு உண்டாகும். இந்திய மாணவர்களுக்குத் தமிழ் கட்டாயத் தேர்வுப் பாடமாகவும் இருக்க வேண்டும். முதலாம் படிவம் முதல் ஆறாம் படிவம் வரை, தமிழை ஒரு பாடமாகப் படிக்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் பள்ளியாக விளங்கலாம். தமிழ்ப்பண்பாடு, சமயம், போன்றவைக் கற்றுக் கொடுக்கும் நடுவமாகவும் இந்தப் பள்ளிகள் விளங்கலாம்.

(தற்பொழுது , கிளாடி தமிழ்ப்பள்ளி , பண்டார் மாகோத்தா செராஸ் தமிழ்ப்பள்ளி என இரண்டு புதியத் தமிழ்ப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மொத்தம் 527 தமிழ்ப்பள்ளிகள்)

திட்டம் 2 (பிறப்பு விகிதம் அதிகரிப்பு)

இந்தியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்து வருகிறது. அதற்கு பிறப்பு விகிதம் குறைந்து வருவது காரணம் என்பது தெளிவு.

வீட்டிற்கு 7-8 குழந்தைகள் இருந்தது, இப்பொழுது 2-3 ஆக குறைந்து விட்டது.  இது நிச்சயம் தமிழ்க்கல்வியிலும் அரசியல் உரிமையிலும் பெரும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சமூக இயக்கங்கள், இந்திய இளைஞர்களை 25 வயதுக்குள் திருமணம் செய்யவும் குறைந்தது 5 பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்க வேண்டும். பத்தாண்டு திட்டமாக இதை முன்னெடுக்க வேண்டும்.

இன்றைய சவால்மிகுந்த பொருளாதாரச் சூழலில் இது சாத்தியம் இல்லாததுபோல் தோன்றும். வேறுவழி? சாத்தியமில்லாததைச் சாத்தியமாக்குவதே தலைமைத்துவம்.

முயற்சி திருவினையாக்கும்!