தினமும் 15 கி.மீ. நடைபயணம் 30 ஆண்டுகள் பணி: தபால்காரரை பாராட்டி நடிகர் சிரஞ்சீவி டுவீட்

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தபால்காரரை நடிகர் சிரஞ்சீவி பாராட்டி டுவீட் செய்துள்ளார்.

ஐதராபாத், நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவன். கடந்த 30 ஆண்டுகளாக தபால் துறையில் பணியாற்றி வந்தார். இவர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர் தனது வாழ்வில் பலவித சவால்களை சுமந்து கொண்டு கடிதங்களை வழங்கியுள்ளார்.

அதாவது தினமும் 15 கி.மீ. அடர்ந்த காட்டிலும் பயணம் செய்து மக்களுக்கு தபால்களை கொடுத்து வந்தார். இவர் செல்லும் வழி அடர்ந்த காடு என்பதால் அவ்வழியே காட்டு யானைகள், கரடிகள், வழுக்கும் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியன உள்ளன. அவற்றை கடந்து நாள்தோறும் பணிக்கு வருவதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார். இவருக்கு பூபதி என்ற மனைவி, ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.\

இவரை பற்றிய பதிவுகளை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ தனது டுவிட்டரில் வெளியிட்டவுடன் அதற்கு ஏராளமானோர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், தேசத்திற்காக அவரது அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துகள் என்றார்.

இந்நிலையில்  ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூவின் டுவிட்டர் பதிவை ஷேர் செய்துள்ள சிரஞ்சீவி, பல மக்களுக்கு எல்லா துன்பங்களையும் மீறி தங்கள் வேலையைச் செய்வது மிகுந்த திருப்தியைத் தருகிறது. இதுபோன்ற பெரும் மனம் படைத்தவர்களுக்கு நன்றி. மனிதநேயம் செழிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

dailythanthi