துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்: காங்கிரஸ் அதிரடி

சச்சின் பைலட்

மந்திரி சபையில் இருந்து சச்சின் பைலட்டை நீக்க ராஜஸ்தான் சட்டசபை காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சச்சின் பைலட் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார். ஆனால் எங்களுக்கு 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருக்கிறது என்று அசோக் கெலாட் தரப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே நேற்று ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டசபை எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறாரா உத்தரவு பிறப்பித்தும் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம் போன்ற தலைவர்கள் சச்சின் பைலட்டுடன் பேசி சமரச முயற்சி மேற்கொண்டனர். அதற்கு பலன் அளிக்கவில்லை.

இன்று 2-வது நாளாக மீண்டும் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெற்றது. சச்சின் பைலட் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சச்சின் பைலட் மீண்டும் கூட்டத்தை புறக்கணித்தார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட், அவருக்கு ஆதரவான இரண்டு மந்திரிகள் ஆகியோரை மந்திரி சபையில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் கட்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்துள்ளார்.

malaimalar