‘கொரோனா’ தடுப்பூசி மருந்து : அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் ஆக்ஸ்போர்டு பல்கலை.

புதுடில்லி : ‘கொரோனா’ தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முதல்கட்ட சோதனை புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் பணியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ‘ஆஸ்ட்ராசென்கா’ நிறுவனம் இணைந்து தடுப்பூசி மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்து கடந்த ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டத்தில் பிரிட்டனில் உள்ள 1077 பேரின் உடலில் செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்நாட்டில் உள்ள ஐந்து மருத்துவமனைகளில் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள 18 முதல் 55 வயது வரையிலான நபர்களுக்கு மருந்து செலுத்தப்பட்டது.அவர்கள் உடலில் ‘ஆன்டிபாடி’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதாகவும் இது ஆராய்ச்சியில் புதிய நம்பிக்கையை உருவாக்கி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி சென்றுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கி வரும் தடுப்பு மருந்து பாதுகாப்பனதாகவும் சிறந்த பலனை அளிப்பதாகவும் பிரிட்டனின் ‘லான்செட்’ மருத்துவ இதழ் நேற்று முன் தினம் தெரிவித்து இருந்தது.

தடுப்பூசி சோதனை வெற்றி சீன விஞ்ஞானிகள் அறிவிப்பு

‘கொரோனா’ வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனையில் நம்பிக்கை அளிக்கும் முடிவுகள் கிடைத்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது குறித்து சீன நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது:முதல் கட்டத்தில் குறைந்த அளவு மக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு பரிசோதனை நடந்தது.

தற்போது இரண்டாவது கட்டத்தில் அதிகமானோருக்கு மருந்து செலுத்தப்பட்டது. அதில் 55 வயதுக்கு மேற்பட்ட துணைக் குழுவுக்கும் மருந்து அளிக்கப்பட்டது.இரண்டாம் கட்ட பரிசோதனையில் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. இது நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

dinamalar