மீண்டும் அனுமதி மறுப்பு… சட்டசபையை கூட்டுவதற்கான கோப்புகளை திருப்பி அனுப்பிய ராஜஸ்தான் ஆளுநர்

ராஜஸ்தான் ஆளுநருடன் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தானில் சட்டசபையை கூட்டுவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியதுடன், இரண்டு முக்கிய கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதனால் சச்சின் பைலட்டின் கட்சி பதவி மற்றும் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது.

சச்சின் பைலட் ஆதரவாளர்கள் தனித்து செயல்பட்டு வரும் நிலையில், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்ய காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இதற்காக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

அதன்பின்னர் சட்டசமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்ட அசோக் கெலாட், சட்டசபையை கூட்டுவதற்கு அனுமதி கேட்டு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் கடிதம் கொடுத்திருந்தார். சட்டசபை கூடும் தேதி, சபையை கூட்டுவதற்காக காரணம் குறித்து குறிப்படப்படாததால் ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதன்மூலம் சட்டசபையை கூட்டும் முதல் திட்டம் நிராகரிக்கப்பட்டது.

இதனால் அசோக் கெலாட் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்று  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆளுநர் அதிருப்தி அடைந்தார். அத்துடன் சட்டசபையை கூட்டுவதற்காக காரணம் மற்றும் தேதியுடன் கூடிய புதிய கடிதத்தை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதன்படி புதிய கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார் அசோக் கெலாட். அதில், ஜூலை 31ம் தேதி சட்டசபையை கூட்ட வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பல்வேறு மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறி இருந்தார். அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை.

ஆனால், இந்த முறையும் ஆளுநர் தனது முடிவை அறிவிக்கவில்லை. சட்டசபையை கூட்டக் கோரி முதல்வர் அனுப்பிய கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளார். கூடுதல் தகவல்களை வழங்கும்படி ஆளுநர் கேட்டிருப்பதாக தெரிகிறது.

முதல்வருக்கு ஆளுநர் மிஸ்ரா 2 கேள்விகளை எழுப்பியிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விரும்புகிறீர்களா? சட்டசபையை கூட்டுவதற்காக அனுப்பப்பட்ட கோப்புகளில் அதுபற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால், இதுபற்றி ஊடகங்களில் தாங்கள் பேசுகிறீர்கள்.

சட்டசபையை கூட்ட வேண்டுமென்றால் 21 நாட்களுக்கு முன்பே தெரிவிக்கவேண்டும் என்பதை பரிசீலிக்க முடியுமா? என முதல்வருக்கு ஆளுநர் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு நீடிக்கிறது.

malaimalar