“எஸ்.ஆர்.சி பணத்தை எனது தனிப்பட்ட நோக்கங்களுக்காக செலவிடவில்லை” – நஜிப்

எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனம் (எஸ்.ஆர்.சி) விசாரணையில் பணமோசடி, நம்பிக்கை மோசடி மற்றும் அதிகார முறைகேடு ஆகியவற்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு நஜிப் ரசாக், RM42 மில்லியனை தனது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தவில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கூறியுள்ள முன்னாள் பிரதமர் – தீர்பு “மிகவும் நியாயமற்றது” என்று விவரித்தார்.

எஸ்.ஆர்.சி பணம் அம்னோ பொதுநலத் திட்டங்களுக்கும், சமூக பொறுப்புணர்வு நோக்கத்திற்கும் பயன்படுத்தப்பட்டதாகவும், தனது சொந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை என்றும் நஜிப் கூறினார்.

“99 சதவிகிதம் பொதுநல நோக்கங்களுக்காக செலவிடப்பட்டது. அவை தனிப்பட்ட செலவினங்களுக்காக அல்ல என்பதை நீதிமன்றமே உறுதிப்படுத்தியுள்ளது. தொண்டு செய்ததற்காகவும், அனாதைகளை பராமரிப்பதற்காகவும், அவர்களின் பள்ளிப்படிப்பிற்காகவும் செலவு செய்ததற்காக நான் தண்டிக்கப்பட்டேன்” என்று நஜிப் கூறினார்.

“ஜொகூர், பினாங்கு மற்றும் கெடா மாநில அம்னோவிற்கு தங்களின் பொதுநலத்திட்டங்களை செயல்படுத்த RM650,000 பங்களிப்பை வழங்கியதற்காக எனக்கு RM3.25 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.”

“இதுபோன்ற செலவினங்களுக்கு இன்னும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, அவை தனிப்பட்ட லாபத்திற்காகவோ அல்லது என் வாழ்க்கையின் வசதிக்காகவோ அல்ல, மாறாக மக்களின் நோக்கத்திற்காகவும் கட்சிக்காகவும் செலவு செய்யப்பட்டவை ஆகும்” என்று அவர் மேலும் கூறினார்.

அவரது தண்டனைக்கு எதிராக நஜிப் ஜூலை 30 ஆம் தேதி மேல்முறையீடு செய்துள்ளார்.

மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், அனைத்து தண்டனைகளையும் இடைநிறுத்த நீதிமன்றம் விண்ணப்பத்தை அனுமதித்தது. மேலும், இரண்டு உத்தரவாதங்களுடன் RM1 மில்லியன் கூடுதல் தொகையையும் விதித்தது.