இலங்கை நாடாளுமன்றம்: ஆகஸ்ட் 20ஆம் தேதி கூட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றம் எதிர்வரும் 20ஆம் தேதி கூடவுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், எதிர்வரும் 20ஆம் தேதி காலை 9.30க்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் புதிய நாடாளுமன்றத்திற்கான சபாநாயகர், பிரதி சபாநாயகர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அவர்கள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு முன்பாக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர்.

அதன்பின்னர், புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய சபாநாயகர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 20ஆம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடத்தப்பட்டது.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை பெற்றிருந்ததுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி வேறு கட்சிகளில் போட்டியிட்ட மேலும் பலர் வெற்றியீட்டியிருந்த பின்னணியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 2 தடவைகள் பிற்போடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல், கடந்த 5ஆம் தேதி அமைதியான முறையில் நடத்தப்பட்டது.

தெற்காசியாவிலேயே கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலொன்றை வெற்றிகரமாக நடத்திய நாடாக இலங்கை வரலாற்றில் பதிவாகியுள்ளது.

BBC