ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை; இந்தியாவில் இந்த வாரம் தொடங்குகிறது

புடிதுல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை, இந்தியாவில் இந்த வாரம் தொடங்கப்பட உள்ளது.

உலகம் முழுவதும் பெரிதாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்து கண்டறிவதும் சோதனை அளவிலேயே இருக்கின்றன. ஆனால், ரஷ்யா மட்டுமே இதுவரை கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதிலும் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ளதாக பலரும் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். அதேநேரத்தில், ஆக்ஸ்போர்டு பல்கலை., கண்டறிந்துள்ள தடுப்பூசியை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தொடங்க உள்ளன.

இந்த தடுப்பூசியை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நூறு கோடி டோஸ்கள் உற்பத்தி செய்ய இந்தியாவின் சீரம் இன்ஸ்டியூட்டுடன் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கோவிஷீல்டு எனப்படும் இந்த தடுப்பூசியை பரிசோதிக்கும் நடவடிக்கை, இந்த வராத்தில் தொடங்கப்பட உள்ளது. மும்பையின் இரு மருத்துவமனைகளில் தொடங்கப்படும் பரிசோதனையில், சளி போன்ற பொதுவான அறிகுறிகளை கட்டுப்படுத்துவதன் மூலம், கொரோனாவில் இருந்து பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் மேற்கொள்ளும் இந்த பரிசோதனை இந்தியாவில் உள்ள 17 மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

புனே, வர்தா மற்றும் நாக்பூரில் தலா ஒரு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 400 பேரிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறித்தும், 1,200 பேரிடம் தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. 18 வயது முதல் 99 வயதுக்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் இந்த பரிசோதனையில் பங்கேற்கலாம் என்றும், பரிசோதனையில் பங்கேற்பவர் நல்ல உடல் திறனுடன் இருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinamalar