ஆப்கானிஸ்தானில் சுதந்திர தினத்தன்று சரமாரி பீரங்கி குண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் 101-வது சுதந்திர தினத்தன்று காபூலில் சரமாரியாக பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பயங்கரவாதிகள் பீரங்கி குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்திய காரை ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

காபூல் : ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் உள்நாட்டு போரால் அங்கு தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் மோசமான பாதுகாப்பு நிலைக்கு மத்தியில் நேற்று ஆப்கானிஸ்தானின் 101-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைநகர் காபூலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதை மீறியும் காபூலில் சரமாரியாக பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காபூலில் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் 2 வாகனங்களிலிருந்து பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். கிழக்கு மாவட்டத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான பீரங்கி குண்டுகள் வீசப்பட்டதாகவும், வடக்கு மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும், ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பீரங்கி குண்டு தாக்குதல்களில் 4 சிறுவர்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என தலீபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே பீரங்கி குண்டு தாக்குதலுக்கு மத்தியிலும் சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் காபூலில் ராணுவ அமைச்சக வளாகத்துக்குள் உள்ள சுதந்திர தின நினைவுச் சின்னத்தில் அதிபர் அஷ்ரப்கனி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவர் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

malaimalar