இந்தியாவில் ஒரே நாளில் 78,356 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 78,356 பேருக்கு கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

புதுடெல்லி, மனுக்குலத்தின் சுமுக இயக்கத்துக்கு தடை போட்டிருக்கும் கொரோனா எனும் கண்ணுக்கு தெரியாத எதிரியால், நாடுகளும், அரசுகளும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. சிற்றரசுகள் முதல் வல்லரசுகள் வரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் கையை பிசைந்தே நிற்கின்றன.

அந்தவகையில் இந்தியாவும் நாள்தோறும் புதிய தொற்றுகளாலும், புதிய மரணங்களாலும் கொரோனாவை  எதிர்கொண்டு வருகிறது. தினந்தோறும் சுமார் 70 ஆயிரம் வரையிலான புதிய நோயாளிகள் உருவாகி வருவது மக்களுக்கும், மத்திய-மாநில அரசுகளுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் இன்று  காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 357 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இதைப்போல அந்த 24 மணி நேரத்தில் மேலும் 1045 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.   இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு மாண்டவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 333 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா பாதித்த 8.01 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரே நாளில் 62,026 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28.39 லட்சத்திலிருந்து 29.01 லட்சமானது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 36,91,166-ல் இருந்து 37,69,523 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

dailythanthi