அவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங் முரளிக்கும் ரிம 5.5 லட்சம் அபராதம் 

மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மலேசிய நண்பன், அதன் ஆசிரியர் மற்றும் பூச்சோங் முரளி என அழைக்கப்படும் முரளி சுப்ரமணியம் ஆகியோர் மீது வழக்கறிஞர் கா. ஆறுமுகம் அவர்கள் அவதூறு வழக்கு ஒன்றை 2013ஆம் ஆண்டு உயர் நீதி மன்றத்தில் பதிவு செய்திருந்தார்.

கடந்த  ஆறு வருடங்களுக்கு மேலாக விசாரணையிலிருந்த இந்த வழக்கின் தீர்ப்பை சா அலாம் உயர்நீதிமன்ற  நீதிபதி டத்தோ ரோஸ்லான் அபு பாக்கார் நேற்று (15.9.20) காலை அறிவித்தார்.

அதன் சாரம் வருமாறு.

அவதூறு செய்திகளுக்கான அபராதம் (GENERAL DAMAGES)

இன்று நீதிபதி வழங்கிய தீர்ப்பின்படி, ஆறுமுகத்திற்கு அவதூறு  விளைவித்ததிற்காக, மலேசிய நண்பன் தரப்பினர் ரிம 250,000 யும்,  முரளி சுப்ரமணியம் ரிம 200,000-யும் ஆறுமுகத்திற்கு விளைவித்த அவதூறை நிவர்த்தி செய்ய அபராதமாகச் செலுத்த வேண்டும்.

இன்னல்கள் இடையூற்றுக்கான அபராதம் (AGGRAVATED DAMAGES)

அதோடு தொடர்ந்து இன்னல்கள் இடையூறுகளுக்காக மேலும் ரிம 100,000 அந்த இரு தரப்பினரும் ஆறுமுகத்திற்கு வழங்க வேண்டும்.

தடை உத்தரவு (INJUNCTION)

அதோடு, மலேசிய நண்பனும், முரளி சுப்ரமணியமும் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களும் ஆறுமுகம் பற்றிய எவ்வகையான அவதூறு செய்திகளையும் வெளியிட தடையுத்தரவும் விதிக்கப்பட்டது.

நிபந்தனையற்ற மன்னிப்பு  (UNRESERVED APOLOGY)

இவர்கள் அனைத்து முன்னணி தமிழ் நாளிதழ்களிலும்  ஆறுமுகத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி செய்தி வெளியிடவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

நீதிமன்ற செலவுத்தொகை (COST)

இவர்கள்  நீதிமன்ற செலவுத்தொகையாக ரிம 30,000 வழங்க வேண்டும்.

வட்டி (INTEREST)

மேற்கண்ட அனைத்தும் முழுமையாகக் கட்டிமுடிக்கும் வரையில் அதற்கு 5% வட்டியை, வழக்கு தொடரப்பட்ட தேதியிலிருந்து வழங்க வேண்டும்.

மேற்கண்ட  தீர்ப்பை மேல்முறையீடு செய்யப்போவதாக மலேசிய நண்பன் நிருவாக இயக்குனர் டத்தோ ஷாபி சாமான், மலேசியகினியிடம் தெரிவித்தார்.

பின்னணி

இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிவாரணத்திற்காக 2012-இல் மலேசிய அரசாங்கம் ரிம 3.2 மில்லியன் நிதியை மலேசிய தமிழர் ப்போரம் அமைப்பிடம் (TAMIL FORUM MALAYSIA) வழங்கியது.

இந்த நிதியை அந்த அமைப்பின் நிருவாக குழு உறுப்பினர்களில் ஒருவரான ஆறுமுகம் தவறாகக் கையாண்டனர் என்ற வகையில் அவதூறான செய்திகளைத் தொடர்ச்சியாக மலேசிய நண்பன் நாளிதழ் வெளியிட்டது. இந்த செய்திகளுக்கு காரணமாக இருந்தவர் முரளி சுப்ரமணியம் என்பவர்.

2013ஆண்டு மார்ச் மாதம் தொடர்ச்சியாக தம்மை முன்னிலைப்படுத்தி மலேசிய நண்பன் வெளியிட்ட 6 செய்திகள் கருத்து சுதந்திரத்திற்கு அப்பாற்பட்ட வகையிலும், நியாயமற்ற வகையிலும், தன்னை மக்கள் மத்தியில் அவமானப் படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் எழுதப்பட்டவை என்று ஒரு அவதூறு வழக்கை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தார்

கடந்த 6 ஆண்டுகளாக விசாரணையிலிருந்த இந்த வழக்கில், 9 நபர்கள் சாட்சியளித்தனர்.

சுவராம் மனித உரிமை இயக்கத்தின் முன்னாள் தலைவராகவும், தற்போது அதன் இயக்குநராகவும்,  தேசிய கல்வி சீரமைப்பு முனைப்பு கூட்டமைப்பின் துணைத்தலைவராகவும், சைல்டு நிறுவனம், மலேசியத் தமிழர் ப்போரம்,   பெர்சே போன்ற அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்த ஆறுமுகம்  சுபாங் ஜெயா நகராண்மைக்கழக உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

நிபுணத்துவ பொறியியலாளரான இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார்.