கொரோனா காரணமாக இந்திய விமானங்களின் வருவாய் குறைவு ; மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

புதுடில்லி : கொரோனா பாதிப்பு காரணமாக ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலங்களில் இந்திய விமானங்களின் வருவாய் 85.7 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்கின்றன. ஊரடங்கால் விமான சேவை உட்பட பல போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டன. 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய விமான நிறுவனங்களின் வருவாய் 85.7 சதவீதம் குறைந்து ரூ.3,651 கோடியாக இருந்தது என மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

இது தொடர்பாக ஹர்தீப் சிங் பூரி மேலும் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் மார்ச் 25 முதல் மே 24 வரை திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவை மே 25 முதல் மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால் குறைக்கப் பட்டன. இந்திய கேரியர்களில் ஊழியர்களின் எண்ணிக்கை மார்ச் 31 ல் 74,887 ஆக இருந்து ஜூலை 31 அன்று 69,589 ஆக குறைந்தது. இதன் விகிதம் 7.07 சதவீதம் குறைந்துள்ளது. விமான நிலைய இயக்குநர்களின் வருவாய் 2019 ஏப்ரல் – ஜூன் மாதங்களில் ரூ. 5,745 கோடியிலிருந்து 2020 ஏப்ரல் – ஜூன் மாதங்களில் ரூ. 884 கோடியாக குறைந்துள்ளது. விமான நிலையங்களில் பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 31 அன்று 67,760 முதல் ஜூலை 31 அன்று 64,514 ஆக குறைந்துள்ளது.

ஏப்ரல் – ஜூலை கால கட்டத்தில் தரை கையாளுதல் நிறுவனங்களின் ( ground handling agencies ) ஊழியர்களின் எண்ணிக்கை 22.44 சதவீதம் குறைந்து 29,254 ஆக உள்ளது. இந்திய கேரியர்களின் வருவாய் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் – ஜூன் மாதங்களில் ரூ. 25,517 கோடியில் இருந்து 2020 ஏப்ரல் – ஜூன் மாதங்களில் ரூ. 3,651 கோடியாக குறைந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த வருவாய் 2019 ஏப்ரல் – ஜூன் மாதங்களில் ரூ. 7,066 கோடியாக இருந்தது. ஆனால் 2020 – 21 ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 1,531 கோடியாக குறைந்தது. அத்துடன் நாட்டில் மார்ச் – ஜூலை காலகட்டத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை 1.2 கோடியாக குறைந்து உள்ளது. இது முந்தைய ஆண்டில் 5.85 கோடியாக இருந்தது.

அதே காலங்களில், சர்வதேச விமான போக்குவரத்து சேவை, 93.45 லட்சத்தில் இருந்து, 11.55 லட்சமாக குறைந்துள்ளது. இருப்பினும், சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்கள் இந்தியாவில், வந்தே பாரத் மிஷனின் கீழ் மற்றும் ஜூலை முதல் இயங்கி வருகின்றன. இவ்வாறு தெரிவித்தார்.

dinamalar