சபாவை வழிநடத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – புங் மொக்தார்

பாரிசான் பிரதிநிதிகள் எளிதாக அணுகக்கூடியவர்களாகவும் “பிக் பாஸ்” போல நடந்து கொள்ளாமலும் இருப்பதால், பத்து தவணை சபா மாநிலத்தை வழிநடத்த முடிந்துள்ளது என்று சபா பாரிசான் தலைவர் புங் மொக்தார் ராடின் கூறியுள்ளார்.

“அதனால்தான் எல்லா வேட்பாளர்களுடனும் நான் ஒரு செய்தியைச் சொல்லியுள்ளேன். நாம் வென்ற பின்னர் மீண்டும் மக்களிடம் திரும்ப வேண்டும், ஏனென்றால் நமது பதவி, பொறுப்பு மக்களிடமிருந்து வருகிறது, ஆகவே நாம் மீண்டும் மக்களுக்கு உதவ வேண்டும் என கூறியுள்ளேன்.”

“எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் – நாம் இங்கு சேவை செய்ய வந்துள்ளோம், சேவையை பெற வரவில்லை. அதுவே எங்கள் வாக்குறுதிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சுல்தானைப் போல இருக்கக்கூடாது, பிக் பாஸ் போன்ற இருக்கவும் கூடாது. மக்களுடன் இணைந்து வேலை செய்யுங்கள், களத்தில் இறங்குங்கள், மக்களை சந்திக்கவும், இளைஞர்களை சந்தியுங்கள்.”

“நாம் அவ்வாறு செய்தால், ஒரு தவணை, இரண்டு தவணை, அல்லது பத்து தவணை கால அரசாங்கமாக மட்டும் இருக்க மாட்டோம், மாறாக நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் கூட பாரிசான் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து மக்களால் ஆதரிக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.

“எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். சபாவை வழிநடத்துவதற்கான ஒரு வாய்ப்பை கொடுங்கள். நாங்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் எங்களை தூக்கி எறிந்து விடுங்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

பாரிசான் 41 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதில் அம்னோ 31 மாநில சட்டமன்ற இடங்களில் போட்டியிடுகிறது, பிபிஆர்எஸ் (ஆறு இடங்கள்) மற்றும் எம்சிஏ (நான்கு இடங்கள்).

தேசிய கூட்டணி 29 இடங்களில் போட்டியிடுகிறது. 19 இடங்கள் பெர்சத்து கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஸ்டார் எட்டு இடங்களிலும், எஸ்ஏபிபி இரண்டு இடங்களிலும் போட்டியிடுகின்றன. பிபிஎஸ், 22 சட்டமன்ற இடங்களில் போட்டியிடுகிறது.