சபா தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை, நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு

சபாவில் கோவிட்-19 நோய்த்தொற்றின் நிலைமை இந்நேரத்தில் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், சபா மாநிலத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இந்த சனிக்கிழமை தேர்தல் முடிந்ததும் கோவிட்-19 பரவுவதைத் தடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சு நம்புகிறது என்று அவர் விளக்கினார்.

“இன்னும் மூன்று நாட்களில் வாக்களிக்கும் நாள். எனவே தேர்தலுக்குப் பிறகு அதைக் கட்டுப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

“தேர்தலுக்குப் பிறகு, நாங்கள் மற்றொரு மேற்பார்வை செய்வோம். மேலும் இந்த நிலைமையை நாங்கள் கண்காணித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.”

சபாவில் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து சபா தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் குறித்து ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்தபோது நூர் ஹிஷாம் இதனைக் கூறினார்.

மலேசியா மீண்டும் கோவிட்-19 அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி 82 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் சபா தொடர்ந்து 60 புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. மேலும் செம்போர்னாவில் பாங்காவ்-பாங்காவ் திரளை என குறிப்பிடப்படும் மற்றொரு புதிய திரளை கண்டறியப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்றின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள இந்த வேளையில் வரும் சனிக்கிழமையன்று சபா மக்கள் வாக்களிக்கத் தயாராகி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் அவர்களின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

“இதுவரை நாங்கள் அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருகிறோம், அங்கு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தலாம், குறைக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். முக்கியமானது என்னவென்றால், முன்னணி ஊழியர்கள், பொது மக்கள் என்று அனைத்து தரப்பினரும் நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்ற வேண்டும். இதற்கு இணங்கினால், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தலாம்” என்று நூர் ஹிஷாம் விளக்கினார்.

காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட சபா மக்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இந்த சனிக்கிழமையன்று வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று இன்று முன்னதாக புத்ராஜெயா அறிவித்தது.

இருப்பினும், கோவிட்-19க்கு நேர்மறையாக இருப்பவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், ஆரோக்கியமற்ற மற்றும் அறிகுறி உள்ள வாக்காளர்களுக்காக ஒரு சிறப்பு வாக்களிப்பு சாவடி அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.