“போதுமான பெரும்பான்மையைப் பெற்றுவிட்டேன்” – அன்வார்

புதிய கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வலுவான மற்றும் உறுதியான ஆதரவைப் பெற்றுள்ளதாக பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று கூறினார்.

அவருக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்றார்.

“இந்த நிர்வாகம் நிச்சயமாக அனைத்து மக்களின் பிரதிநிதியாகும், பெரும்பான்மையான மலாய்-பூமிபுத்ரா மற்றும் நாட்டின் அனைத்து சமூகங்களின் நியாயமான பிரதிநிதித்துவமும் இருக்கும்.”

“இஸ்லாத்தின் நிலைப்பாடு, மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மை ஆகியவற்றை அங்கீகரிக்கும் அரசியலமைப்பின் கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து நிலைநிறுத்துவோம், மலாய் மொழி அதிகாரப்பூர்வ மொழியாகவும், மலாய்-பூமிபுத்ராவின் சிறப்பு நிலைப்பாட்டை மேம்படுத்துவதோடு, அனைத்து இனங்களின் குடிமக்களின் உரிமைகளையும் உறுதியாகப் பாதுகாப்போம்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் முகிதின் யாசினின் ஆட்சி கவிழ்ந்து விட்டது” என அன்வார் இப்ராகிம் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

எனினும் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எண்ணிக்கையை பகிரங்கமாகத் தெரிவிக்க அன்வார் மறுத்து விட்டார்.

நேற்று மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினைச் சந்திக்கத் நேரம் ஒதுக்கப்பட்டதாகவும், எனினும், மாமன்னர் உடல் நலக் குறைவினால் தேசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் இயலாமல் போய்விட்டதாகவும் அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.