பொதுத் தேர்தலுக்கான அழைப்பை விடுக்கும் அம்னோ தலைவர்கள்!

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மையான ஆதரவைக் கொண்டிருப்பதாகக் கூறி, பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, பொதுத் தேர்தலுக்கான அழைப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

பாரிசான் கட்சியின் பொதுச்செயலாளர் அன்னுவார் மூசாவிடமிருந்து இந்த அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் அதிகாரத்தை மீண்டும் வாக்காளர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்று கூறினார்.

“எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள், எந்த கட்சியில் இருந்து அன்வாரை ஆதரித்தாலும் அன்வார் பிரதமராக முடியாது.”

“முதலில் சபா மாநிலத் தேர்தலை முடிப்போம், பின்னர் மக்கள் தங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். மாமன்னர் ஒரு உடனடி பொதுத் தேர்தலை அறிவிக்க வேண்டும்,” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அது தேசிய கூட்டணிக்கு முன் கதவைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாள் வரை தேசிய கூட்டணி ஒரு பின் கதவு அரசாங்கம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது என்று அவர் கூறினார்.

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என விரும்பும் மற்றொரு அரசியல்வாதி பாரிசானை சார்ந்த பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுதீன் அப்துல் ரஹ்மான் ஆவார்.

இதற்கிடையில், தேசிய கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பாஸ், சற்று வித்தியாசமான ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அனைத்து 18 பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முகிதீனின் தலைமையை முழுமையாக ஆதரிப்பதாகவும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி முகிதீன் முறையான பிரதமராக இருக்கிறார் என்றும் அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஒரு அறிக்கையில் கூறினார்.

இதற்கிடையில், தனது ஆதரவை நிரூபிக்கும்படி அன்வாரை கேட்டுக்கொண்டுள்ளார் பெர்சத்துவின் முன்னாள் உச்ச மன்ற உறுப்பினர் ரைஸ் யாத்திம்.

குவா முசாங்கின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மூத்த அம்னோ தலைவர் துங்கு ரஸலீ ஹம்சாவும் இதேபோன்ற அழைப்பை விடுத்தார்.

“ஆதரவை இழக்கும்போது, பிரதமர் பதவி விலகுவதற்காக மாமன்னரை சந்திக்க வேண்டும். பொதுத்தேர்தலை நடத்த நாடாளுமன்றத்தை கலைக்கவோ அல்லது பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கருதும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரை பிரதமாராக நியமிக்கவோ மாமன்னரைக் கேட்க வேண்டும்.”

“இது பின்னர் மாமன்னரால் முடிவு செய்யப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி செயல்பட முடியாது. போதுமான எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் இருப்பதாகக் கூறினாலும், மாமன்னரால் அழைக்கப்படாமல் அரசாங்கத்தை அமைக்க முடியாது. அதுதான் முறை,” என்று அவர் கூறினார்.