பொது தேர்தல் நடந்தால் அடுத்தப் பிரதமர் முஹமட் ஹசான்!

இராகவன் கருப்பையா- கடந்த பிப்ரவரி மாதம் பக்காத்தான் அரசாங்கம் கவிழ்ந்ததில் இருந்து அரசியல் நிலைத்தன்மை இல்லாத ஒரு சூழலில் தல்லாடிக்கொண்டிருக்கும் நம் நாட்டுக்கு அடுத்த பிரதமர் யாராக இருக்கும் என்பதே தற்போது மக்களின் மனதில் அலைபாயும் ஒரு ஐயப்பாடாகும்.

தம்மிடம் தற்போது அதிகப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும புதிய அரசாங்கத்தை அமைக்க தாம் தயாராய் உள்ளதாகவும் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் அதிரடியாக அறிவித்த போதிலும் எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழல்தான் இன்னமும் நிலவுகிறது.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 61 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சிபுரிந்து வந்த அம்னோவின் தலைவர்கள்தான் பிரதமராக இருந்து வந்துள்ளதோடு துணைத் தலைவர்கள் மற்றும் உதவித் தலைவர்கள் முறையாக முன்னேறி அப்பதவியை பிறகு அலங்கரிப்பது வழக்கம்.

ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பாரிசான் கூட்டணி தோல்வியடைந்து பிறகு இவ்வாண்டுத் தொடக்கத்தில் பக்காத்தான் ஆட்சியும் கவிழ்ந்ததைத் தொடர்ந்து நிலைமை முற்றாக மாறியதை நாம் பார்த்தோம்.

கடந்த மே மாதம் 1ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் முஹிடின் யாசினுக்குக் கிடைத்த வாய்ப்பானது, மலாய்க்காரத் தலைவர்கள் பலருடைய நம்பிக்கையை துளிர்விடச் செய்துள்ளதையும் நம்மால் உணரமுடிகிறது.

தற்போதைய சூழவில் நடந்து முடிந்த சபா மாநிலத் தேர்தல் கூட்டரசு அரசாங்கத்தில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை.

அத்தேர்தல் முடிவுகளும் அதனைத் தொடர்ந்த ஆட்சியமைப்பும் ஒரு காலக்கட்டத்தில் மலேசிய அரசியல் வானில் ஜாம்பவானாக இருந்த அம்னோவை தற்போது பல நிலைகளில் பிளவுபடச் செய்துள்ளதையும் மக்கள் உணராமல் இல்லை.

அமைக்கப்பட்டு இன்னும் 5 ஆண்டுகள் கூட ஆகாத புதிய கட்சியான முஹிடினின் பெர்ஜயா, தங்கள் கட்சியை ஒரு பல்லிழந்த புலியைப் போலாக்கிவிட்டதாக அம்னோவின் பல மூத்தத் தலைவர்கள் மட்டுமின்றி அடிமட்ட உறுப்பினர்களும் கூட குமுறுகின்றனர்.

பிரதமர் என்ற ஆட்சி அதிகாரத்தில் பெர்ஜயா தலைவர் முஹிடின் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்கிறார் என்று அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கு தம்மால் இயன்ற அனைத்தையும் அவர் செய்துகொண்டிருப்பதும் வெள்ளிடை மழைதான்.

குறைந்தபட்சம் 2023ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 15ஆவது பொதுத் தேர்தல் வரையிலாவது பிரதமர் பதவியை இருக பிடித்துக்கொள்ளும் நோக்கில் காய்களை மிக சாமர்த்தியமாக அவர் நகர்த்தி வருவதாகத் தெரிகிறது. அதனால்தான் திடீர் தேர்தல் பற்றி அவர் பேசுவதே இல்லை.

ஆனால் பொறுமை இழந்துள்ள பெரும்பாலான அம்னோ தலைவர்கள் கழுகுகளைப்போல் காத்திருக்கின்றனர் தீடீர் தேர்தலுக்காக!

இந்நிலையில் அன்வாரின் அறிவிப்பு அவர்கள் எல்லாரையும் கலக்கத்திற்குள்ளாக்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

அன்வார் பிரதமராகிவிடுவாரோ என்ற ஒருவகை அச்சம் முதல் முறையாக மகாதீரைக் கூட பீடித்துள்ளதைப் போல் தெரிகிறது. கடந்த ஒரு வாரகாலமாக அன்வார் மீது பல அவதூறுகளை அவர் சுமத்தி வருவதை மக்கள் கவனிக்காமல் இல்லை.

அன்வாரை ஆட்சியமைக்க பேரரசர் அழைத்தாலும் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகும் அப்பதவியில் அவர் தொடர்ந்து இருப்பார் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் பக்காத்தான் கூட்டணிக்கு கடந்த 2018ஆண்டில் கிடைத்த ஆதரவு இப்போது இல்லை என்று நம்பப்படுகிறது.

முன்னாள் பிரதமர் நஜிபும் அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட்டும் கணக்கிலடங்கா ஊழல் வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியுள்ள போதிலும் பிரதமராகும் இலக்கிலேயே அவ்விருவரும் செயலாற்றி வருவது நன்றாகவே புலப்படுகிறது.

எனினும் அவ்விருவருடைய கனவுகள் நனவாகும் வாய்ப்புகள் மிகவும் கம்மிதான். கட்சியின் இதர தலைவர்கள் சும்மாவா கைகட்டி வேடிக்கை பார்ப்பார்கள்?

கட்சியின் செயலாளர் அனுவார் மூசாவுக்கு அப்படியொரு ஆசை இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அவர் மாரா தலைவராக இருந்த போது ஆஸ்திரேலியாவில் ஒரு கட்டடம் வாங்கியது தொடர்பான ஊழல் விசாரணையில் அரசல் புரசலாக அவர் பெயரும் அடிபடுவதால் அந்த விவகாரம் எந்நேரத்திலும் அவர் மீது ஈட்டி போல பாய வாய்ப்பிருக்கிறது.

ஒரு காலக்கட்டத்தில் நஜிபின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்ட தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடினின் வளர்ச்சியும் கூட இப்போது சுணக்கம் கண்டுள்ளதைப் போல் உள்ளது.

நஜிப் ஆட்சியில் அவர் தற்காப்பு அமைச்சராக இருந்த போது ராணுவ ஹெலிகொப்டர்கள் வாங்கும் விவகாரத்தில் குளறுபடிகள் இருந்ததாக செய்திகள் வெளியானதும் நாம் அறிந்த ஒன்றுதான். எனவே பிரதமர் வேட்பாளர் பட்டியலில் அவருடைய பெயர் இடம் பெறுவதும் சற்று கடினம் என்று கூறலாம்.

அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆற்றல் மிக்க ஒரு இளம் தலைவர். ஆனால் 44 வயதே நிரம்பிய அவரை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியாது.

பக்காத்தான் ஆட்சி கவிழ்வதற்கு வழிவகுத்த பி.கே.ஆர். கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி இப்போது பெர்ஜயாவில் இணைந்துள்ள போதிலும் அவருடைய அரசியல் வாழ்க்கை அடுத்தத் தேர்தலோடு அஸ்தமனமாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

பி.கே.ஆர். கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டதாகக் கருதப்படும் அவருடைய செல்வாக்கு தற்போது படு வீழ்ச்சிகண்டுள்ளதை யாரும் மறுக்க இயலாது.

அதுமட்டுமின்றி ஆபாச காணொலி ஒன்றில் அவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டில் வெளியான சர்ச்சைகளுக்கு அவருடைய அரசியல் எதிரிகள் மீண்டும் உயிரூட்டக்கூடும்.

எந்த காரியமானாலும் அதனுள் இஸ்லாமிய கோட்பாடுகளை தீவிரமாக தினிக்க முயலும் பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் கரைபடியாத, சர்ச்சைகளுக்கு இடமளிக்காத, தகுதியுடைய ஒரு மூத்தத் தலைவர் என்றால் அது அம்னோவின் துணைத்தலைவர் முஹமட் ஹசானாகத்தான் இருக்க முடியும்.

அம்னோ ஆட்சியமைக்குமானால் பிரதமர் வேட்பாளராக நம் கண்ணெதிரே பளிச்சென தெரிபவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரான அவர் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரரும் கூட.

இனவாதங்களுக்கிடையில்,  ஓரளவு  பொருப்பான, நியாயமான அறிக்கைகளை மட்டுமே மிகக் கவனமாகவும் தைரியமாகவும் வெளியிடும் அவர் பிரதமராக நாட்டை வழிநடத்துவதற்கு ஒரு தகுந்த தலைவர் எனலாம்.