புரட்சியின் அடையாளம் : கியூபா வரலாற்றை மாற்றியமைத்த மாவீரன்

சிவாலெனின் | ‘சேகுவேரா’ இது ஒரு மனிதனின் பெயரல்ல, ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம், உலகப் புரட்சியின் மொத்த உருவம். இந்தப் பெயரைக் கேட்டாலே இன்றைக்கும் ஏகாதிப்பத்திய ஓநாய்கள் அடங்கிதான் போகும். உலகின் எந்த மூலையில் புரட்சி வெடித்தாலும், அங்கு மக்கள் கையில் ஏந்துவது புரட்சியின் அடையாளமான சேகுவேரா எனும் புரட்சியாளனின் புகைப்படத்தைதான்.

சேகுவேராவின் வீரமும் அவரது புரட்சி சிந்தனையும் மக்களின் நினைவுகளிலிருந்து நீங்க வேண்டும் என்பதில் மிகத் துள்ளியமாக, ஏகாதிபத்திய ஓநாய்கள் செயல்பட்டன. அதற்காகவே, சேகுவேராவின் மரணத்தை மிகக் கொடூரமான ஒன்றாக வடிவமைத்தார்கள். அவர் எங்குப் புதைக்கப்பட்டார் என்பதைக்கூட பெரும் இரகசியமானதாக அவர்கள் பாதுகாத்து வந்தார்கள்.

இருந்தபோதிலும், கொல்லப்பட்டு 53 ஆண்டுகள் கடந்தும், இன்றும் புரட்சி உலகின் பெரும் சின்னமாக சே வாழ்ந்து கொண்டிருக்கிறார். புரட்சிகரத் தன்மைக்கும் தைரியத்திற்கும் மட்டுமின்றி, உயரியப் பண்புகளுக்கும் அவர் உதாரணமாகிவிட்டார், மூன்றாம் உலகின் போர்க் குணமிக்க புரட்சிக்காரனுக்குப் பிரத்தியேகமான அடையாளமாகி விட்டார்.

ஏகாதிபத்தியத்தை அழித்தொழிக்காமல் படுகொலைகளையும் பட்டினி சாவுகளையும் தடுத்திட முடியாது எனத் தனது கால்களின் பயணத்தைத் தொடங்கியவர்தான் சேகுவேரா. அமெரிக்கா, கியூபாவில் ஒரு மாற்று ஆட்சியை ஏற்படுத்தி, அதன் பொருளாதாரத்தை உறிஞ்சிக்கொண்டிருந்த காலப்பகுதியில், பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து, கியூபா சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அரசுக்கு எதிரான புரட்சியில் களமிறங்கி, கியூபாவின் சரித்திரத்தையே மாற்றியமைத்தவர்தான் சேகுவேரா.

‘உலகின் எங்கோ நடக்கும் அநீதியைக் கண்டு உன் மனம் கொதித்தெழுந்தால் நீயும்  எனக்குத் தோழன் தான்’ எனும் உன்னத வரிகளை விதைத்துச் சென்ற சேகுவேரா அர்ஜெண்டினாவில் பிறந்திருந்தாலும்; இலத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்களுக்காகவும் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காகவும் போராடிய மாபெரும் போராளி. கியூபா புரட்சி அதன் விடுதலைக்கு வித்திட்டவுடன், அவருக்குக் கிடைத்த அரசு பொறுப்புகளில் சில காலம் இருந்தவர், கங்கோ மற்றும் போலிவியா நாடுகளின் விடுதலைக்காக தனது அடுத்தக்கட்ட புரட்சிப் பயணத்தைத் தொடங்கினார்.

1959 முதல் 1961 வரையில், கியூபா மத்திய வங்கியின் தலைவராகவும் நிதி மற்றும் தொழிற்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அப்போதுதான், கியூபாவில் நிலச் சீர்த்திருத்தம் மற்றும் தொழிற்துறை தேசியமயமாக்கல் உதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதியாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என ‘சே’ திடமாக நம்பினார். கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய இரஷ்யா வாக்குறுதி தந்தபோது, “இரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால், அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்’’, எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம்.

அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத்தது. ‘‘அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப்பேன்’’, என அமெரிக்க மண்ணிலேயேத் துணிச்சலாகப் பேட்டி தந்தார் ‘சே’. சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

தாம் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது, படிப்பிற்கு ஓராண்டு விடுப்பு  எடுத்துக்கொண்டு, இலத்தின் நாடுகள் அனைத்தையும் தனது மோட்டார் சைக்கிளில் சுற்றிவந்த சேகுவேரா, பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்றுசேர, ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வுகாண முடியும் என நம்பினார்.

இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைபடும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. அவரது இந்த மோட்டர் சைக்கிள் பயணம் பின்னாளில் ‘தி மோட்டார்சைக்கிள் டைரிஸ்’ (THE MOTORCYCLE DIARIES) எனும் பிரசித்திப் பெற்ற நூலாக உருவெடுத்ததோடு, ஸ்பெனிஸ் மொழியில் அது திரைப்படமாகவும் வெளிவந்தது.

பொலிவியாவில் சிஐஏ மற்றும் அமெரிக்கச் சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில், அக்டோபர் 9, 1967-ல், விசாரணைகள் ஏதுமின்றியே சே குவேரா கொல்லப்பட்டார். இறக்கும் போதும் கண்களை மூடவில்லை அம்மாவீரன். தன்னைக் கொல்ல வந்தவனைப் பார்த்ததும், “ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன். பிறகு என்னை சுடு’’’, என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.

அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிசப் புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராகக் கொண்டாடப்படுகிறார். சே 1966-ம் ஆண்டின் கடைசிகளில், கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு, உருகுவே நாட்டு போலி கடப்பிதழுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது.

அடிமைபட்டுக் கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய்நாடுதான், அந்நாடுகளின் போராட்டங்களுக்கும் விடுதலைகளுக்கும் நான் தேவையாகவே இருக்கிறேன் என முழங்கிய புரட்சியாளர், தன்னை மருத்துவர் என அழைப்பதைக் காட்டிலும் ஒரு போராளியாக அழைப்பதையும் அடையாளப்படுத்துவதையுமே விரும்பினார். போர்களத்தில் துப்பாக்கியைவிட பெரும் ஆயுதம் புத்தகங்களே என லெனின் கூறியது எவ்வளவு உண்மை என்பதற்குச் சேகுவேரா ஒரு முன்னுதாரணம் எனலாம். சேவின் வீட்டில் அவர் வைத்திருந்த 3000-க்கும் மேற்பட்ட புத்தகங்களே அதற்கு சான்று.

உலக மக்களின் விடுதலையைத் தனது இலட்சியமாக கொண்டு போராடிய மாவீரன், இறுதியாக, ஆடு மேய்க்கும் ஒரு பெண்ணால் பொலிவியா சிஐஏ இராணுவத்திடம் காட்டிக் கொடுக்கப்பட்டார். தகவல் கிடைத்த பொலிவியா இராணுவம் சேகுவேராவைச் சுற்றி வளைக்க முற்படுகிறார்கள். இராணுவத்தைச் சார்ந்த ஒருவனின் துப்பாக்கிக் குண்டு சேகுவேராவின் காலில் பாய்ந்தது, சிறிது நேரத்தில் சேகுவேராவின் வலது காலிலும் கையிலும் துப்பாக்கித் தோட்டா சீறி பாய்கிறது, சேகுவேரா கைது செய்யப்படுகிறார்.

ஒட்டியக் கன்னத்துடன், காட்டுத்தனமான தாடியுடன், முகமெல்லாம் சோர்வுடன், இரத்தம் வடிய வடிய சேகுவேரா கைது செய்யப்படுகிறார். உலக மக்களின் விடுதலைக்காகக் களமிறங்கிப் போராடிய உலகப் புரட்சியாளன் சேகுவேரா அக்டோபர் 7-ம் தேதி 1967-ல், பிற்பகல் 3.30 மணிக்குக் கைது செய்யப்படுகிறார்.

அவரை உயிரோடு வைத்து விசாரணை செய்தால் புரட்சி வெடிக்கும் என்பதால், அவரைக் கொன்றுவிடுங்கள் என, சிஐஏ-விடமிருந்து போலிவியா இராணுவத்திற்குக் கட்டளை வருகிறது. கைது செய்யப்பட்ட சேகுவேரா போலிவியாவில் உள்ள லாஹிகுவாரா பள்ளிக்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு அவரை ஒரு மேசையில் கிடத்தி, கைகால் உடல் என எல்லாப் பகுதிகளும் கட்டப்படுகின்றன. ஒரு மாவீரன், அவனது வாழ்வின் இறுதிகட்டத்தில், ஒரு மிருகத்தை விட படுமோசமாக நடத்தப்படுகிறான்.

சேகுவேரா கைது செய்யப்பட்ட செய்தி, அமெரிக்காவிற்குப் பெரும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தவேளை; கியூபா, போலிவியா நாடுகளின் மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியான, சோகம் நிறைந்த செய்தியாக இருந்தது. தனது உயிர் போவதைக் கூட கவலைப்படாமல், தனக்கு உணவு கொண்டு வந்த பெண்மணியிடம், இது எந்த இடம் என தாம் சிறைவைக்கப்பட்ட இடம் குறித்து கேட்டார். பதிலுக்கு அப்பெண்மணி இது பள்ளிக்கூடம் எனக் கூறியதும், அதிர்ந்துப் போன சேகுவேரா, இத்தனை மோசமாக இருக்கும் இக்கட்டடத்தில் எப்படி உங்களால் வகுப்புகள் நடத்த முடிகிறது என்று கேட்டார்.

மேலும், கவலைப்படாதீர்கள், ஒருவேளை நான் பிழைந்திருந்து, புரட்சி வெற்றி பெற்றால், உங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக்கூடம் கட்டித்தருகிறேன் என்றும் கூறினார். மரணத்தை எட்டிக் கொண்டிருக்கும் ஒருவரின் கடைசி நேர உரையாடல்கூட மக்களுக்கானதாக இருந்ததைக் கண்டு அந்தப் பெண்மணி வியந்து அதிர்ச்சியில் உறைந்தார்.

மேலும், தன் உயிர் போவதற்கு முன்னர், “பிடல் காஸ்ட்ரோவை நம்பிக்கையோடு இருக்க சொல்லுங்கள். இலத்தீன் அமெரிக்கா முழுவதும் புரட்சி வெற்றி பெறும்” , என்றும் முழங்கினார். தன் துணைவியாரை மறுமணம் செய்துகொள்ள சொல்லுங்கள் எனும் செய்தியையும் அவர் தெரிவிக்கிறார்.

தன்னைச் சுட்டுக் கொல்ல வரும் போலிவியா இராணுவ மேஜர் டெர்ரனை நோக்கி “கொஞ்சம் பொறு, நான் எழுந்து நின்றுவிடுகிறேன்”, என சேகுவேரா கூறினார். சேகுவேராவின் அந்த இறுதி கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஒரு கோழையைச் சுடுவது போல் சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

மனித விடுதலைக்காகவும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலைக்காகவும் போராடிய மாபெரும் போராளியின் உயிர் 9-ம் தேதி, அக்டோபர் மாதம் 1967-ல் இவ்வுலகை விட்டு பிரிந்தது. அவரது உடலும் உயிரும் இம்மண்ணை விட்டு பிரிந்திருந்தாலும் அவரது புரட்சிகரமான சிந்தனையும் உயரியப் போராட்டமும் மக்கள் விடுதலையும் இன்றைய தலைமுறையிடம் இறுகபற்றிக் கொண்டுதான் இருக்கிறது.

சேகுவேரா கொல்லப்பட்ட இடம் கூடத் தெரியக்கூடாது என்பதற்காக அந்த பள்ளிக்கூடத்தையே முற்றாக தகர்தெறிந்தனர். மேலும், கொல்லப்பட்டது சேகுவேராதான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, ஆயுதம் ஏந்திப் போராடிய சேகுவேராவின் இரு கைகளும் வெட்டி எடுக்கப்பட்டது பெரும் வேதனையானது. சேகுவேரா அர்ஜெண்டினாவில் பிறந்திருந்தாலும் அவரைக் கியூபா மக்கள் தங்கள் தேசத்து மகனாகவும் பொக்கிசமாகவும் பார்த்தனர். கொன்று புதைக்கப்பட்ட சேகுவேராவின் உடலைக் கியூபாவிற்குக் கொண்டு வர அந்நாட்டு மக்களும் பிடல் காஸ்ட்ரோவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி கொண்டிருந்தனர்.

அவர்களின் கோரிக்கைகளுக்கு உலகமெங்கும் போராட்டம் வெடிக்க தொடங்கியது. சேகுவேராவையும் இதரப் போராளிகளையும் ஒன்றாக வைத்து எரித்துவிட்டதாக ஒவ்வொரு முறையும் போலிவியா பொய் சொல்லிக் கொண்டிருந்தது.

இறுதியாக, சேகுவேரா எங்களின் விடுதலைக்காக வந்தவர், அவரது உடலை அரசாங்கம் உடனடியாகக் கண்டுப்பிடிக்க வேண்டும் எனப் போலிவியா மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இனியும் நாம் கட்டவிழ்த்துவிடும் பொய் எடுப்படாது என உணர்ந்த போலிவியா அரசு, சேகுவேராவின் உடலைத் தேட தொடங்கியது. சேவின் உடல் கண்டுப்பிடிக்கப்படுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டில் இரண்டு கைகளும் இல்லை, அது சேவின் உடல்தான் என உறுதி செய்யப்பட்டது.

30 ஆண்டுகள் கடந்து, சேகுவேராவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. 1997-ல், அவரின் உடல் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, அப்பெட்டியின் மீது கியூபா நாட்டுக் கொடி பறக்கவிடப்பட்டது. அத்தருணத்தில், சேகுவேராவின் தோழரும் கியூபா நாட்டு அதிபருமான பிடல், “நன்றி சே. உனது வரலாற்றுக்கும் வாழ்க்கைக்கும் உதாரணத்திற்கும் நன்றி. கடுமையாகப் போராடிய உனது சிந்தனைகளை நாங்கள் பாதுகாப்போம். அதற்காக நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களுக்கு உத்வேகம் அளிக்க நீ வந்தமைக்கு நன்றி”, என்று முழங்கினார்.

மனிதனாக பிறந்தவன் ஒவ்வொரு தேசத்தையும் தன் தாய்நாடாக எண்ணி அதன் விடுதலைகாகப் போராட வேண்டும். எங்கே அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் தலைவிரித்து ஆடுகிறதோ, அங்கே புரட்சி வெடிக்கும்’, என்று முழங்கிய சேகுவேரா ‘நான் சாகடிக்கப்படலாம், ஆனால் தோற்கடிப்பட மாட்டேன்’, என முழங்கியதன் அர்த்தம்தான், இன்று உலகின் எந்த மூலையில் புரட்சி வெடித்தாலும் அங்கு சேகுவேராவின் முகத்தைப் புரட்சியின் சின்னமாய் நாம் பார்த்துக்கொண்டிருப்பது.

சேகுவேரா இந்த நூற்றாண்டில் வாழ்ந்த அதீதப் போராளி. நாடுகள் கடந்து, இனங்களைக் கடந்து, மொழிகளைத் தாண்டி மானுடத்தை நேசித்த மகத்தான மாமனிதன் சேகுவேரா. அவர் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளார், நாம் விருட்சமாகியுள்ளோம்.

நீ ஊமையாக இருக்கும் வரை – உலகம் செவிடாய் தான் இருக்கும்!