டாக்டர் எம்: பிரதமர் வேட்பாளராக நான் யாரையும் ஆதரிக்கவில்லை

பிரதமர் வேட்பாளராக எந்தவொரு நபருக்கும் தான் ஆதரவு வழங்கவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

நேற்று சமூக ஊடகங்கள் மூலம் வழங்கப்பட்ட ஒரு சிறப்பு செய்தியில், தான் நிறுவிய ‘பெஜுவாங் தானாஆயேர்’ கட்சிக்கும் (பெஜுவாங்) அப்பதவியை விரும்பும் எந்தவொரு கட்சியுடனும் தனிநபருடனும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

“பிரதமராக விரும்பும் வேட்பாளர் ஒருவரை நான் ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது.

“நான் பிரதமர் வேட்பாளராக யாரையும் ஆதரிக்கவில்லை என்று கூற விரும்புகிறேன்.

“நான் எனது புதியக் கட்சியில் இருக்கிறேன், இது பெஜுவாங், இந்தக் கட்சி சுதந்திரமானது, எந்தவொரு கட்சியுடனும் அல்லது ஒரு பதவியைப் பெறுவதற்கான இலட்சியங்களைக் கொண்ட தனிநபருடனும் எந்தத் தொடர்பும் இந்தக் கட்சிக்கு இல்லை,” என்று அவர் கூறினார்.

எனவே, தான் ஆதரவு அளிப்பதாக, எந்தவொரு பிரதமர் வேட்பாளருடனும் தன்னை யாரும் தொடர்புப்படுத்த வேண்டாம் என்று மகாதீர் கூறினார்.

2018 பொதுத் தேர்தலில் பிஎச் வெற்றி பெற்ற பின்னர், மகாதீருக்கும் அன்வருக்கும் இடையிலான அதிகாரப் பரிமாற்றப் பிரச்சினை பெரும்பாலும் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே இதுவரை இருந்து வருகிறது.