அவர்கள் ஏன் லிம் கிட் சியாங்கைக் கேட்கவில்லை?

கருத்து | உங்களைப் பற்றிய நேர்மையான மதிப்பீட்டை நீங்கள் பெற விரும்பினால், உங்கள் நண்பர்களிடமோ அல்லது உங்களைப் போன்று, அதேக் கொள்கைகளைக் கொண்டவர்களிடமோ கேட்காதீர்கள்.

உங்களைப் பிரியப்படுத்தவும், வாதங்களைத் தவிர்க்கவும் நீங்கள் கேட்க விரும்புவதையும் மட்டுமே நண்பர்கள் சொல்வார்கள். எனவே, நீங்கள் ஒரு நேர்மையான கருத்தை விரும்பினால், ஒரு விரோதியிடம் அவரது கருத்துக்களைக் கேட்க முயற்சியுங்கள், அவர் பொய் சொல்லக்கூடும், ஆனால் அவர் ஏன் பொய் சொல்ல வேண்டும்? அவர் உங்களிடம் கடன்பட்டிருக்கவில்லை என்பதால் அவர் இழப்பதற்கு ஒன்றுமில்லை.

ஒருவர் இருக்கிறார், தற்போதைய அரசியல் குழப்பங்கள் பற்றிய கருத்துக்களை அவரிடமும் கேட்டறிய வேண்டும். அவர்தான் லிம் கிட் சியாங், ஒரு மூத்த அரசியல்வாதி, குவா முசாங் எம்.பி., தெங்கு ரஸாலீ ஹம்சா, அல்லது கு லி போன்று, பல பிரதமர்களுடன் பணியாற்றியவர்.

அக்டோபர் 13-ம் தேதி, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் மாமன்னரைச் சந்தித்துத் திரும்பிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, மலேசியாவின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்த அவரது கருத்துக்களை அறிய, கு லி-க்கு மன்னர் அழைப்பு விடுத்தார்.

அடுத்த நாள், கு லி மாமன்னரைச் சந்தித்ததற்கான காரணம், அவர் “மலேசிய அரசியலில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் மிகவும் முதிர்ச்சியடைந்த ஒரு தலைவர்” என்றும்; “அனைத்து மலேசியப் பிரதமர்களுடனும் பணியாற்றியவர்” என்றும், கு லியின் அரசியல் செயலாளர் மொஹமட் லோக்மன் கானி பெர்னாமாவிடம் கூறினார்.

இது லோக்மனின் தனிப்பட்ட மதிப்பீடா, கு லி’யின் பார்வையா, அல்லது மன்னர் உண்மையில் சொன்னது இதுதானா?

லிம் கிட் சியாங்கைவிட, கு லி ஓராண்டு அரசியலில் அதிகம் இருந்திருக்கலாம், ஆனால் தற்போதைய அரசியல் குழறுபடிகள் குறித்து, கிட் சியாங்கின் கருத்துக்களையும் கேட்டறிவது மன்னருக்குச் சிறப்பல்லவா?

லிம் கிட் சியாங், தேசியவாத மலாய்க்காரர்கள் மற்றும் தீவிர முஸ்லிம்களின் மரியாதைக்கு உரியவராகத் திகழ்கிறார், அவரின் டிஏபி கட்சி, பல தசாப்தங்களாக அம்னோ பாருவால் தூற்றப்பட்டு வரும் ஒரு கட்சி. பிரதமராக வர வேண்டும் என்ற எந்த ஆசையையும் அவர் கொண்டிருக்கவில்லை, மலாய்க்காரர் அல்லாதவர் பிரதமராக சாத்தியமில்லை என்பதை அவர் அறிவார், மேலும் ஊழலிலிருந்து விடுபட்டு ஒரு நியாயமான, சமமான சமுதாயத்திற்காக தனது வாழ்க்கையை லிம் அர்ப்பணித்துள்ளார்.

லிம் மன்னரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை, தன்னுடையக் கருத்துக்கள் சரியானவை, தகுதியானவை என்பதை நிரூபிக்க தன்னால் முடிந்தவரை அவர் முயற்சிப்பார். பரஸ்பர சுயநலத்தின் அடிப்படையில் மலேசியாவைக் காப்பாற்ற லிம்மும் மன்னரும் இணைந்து செயல்பட முடியும் என்பதைப் பார்ப்பது, மலாய்க்காரர்களுக்கு மிகப்பெரிய நல்லிணக்கமாக இருக்கும்.

இன்றைய அரசியல் குழப்பங்கள் குறித்த லிம்மின் கருத்தை மன்னர் கேட்டாலே போதும், அதன்படி நடக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

மக்களின் நாயகன்

பொது மக்களில் சிலர் கு லி-க்குச் சாதாரண மக்கள் எப்படி வாழ்கிறார்கள், சிந்திக்கிறார்கள், உணர்கிறார்கள் என்பது தெரியாது என்று நினைக்கிறார்கள். ஒருவர், “கு லி ஓர் இளவரசர், அவரை ஒருபோதும் நம்மில் ஒருவராக கருதமுடியாது,” என்றார்.

மறுபுறம், லிம் சாதாரண மக்களுடன் அதிகத் தொடர்பு வைத்திருப்பதாகவும், நல்ல உறவைக் கொண்டிருப்பதாகவும் பலர் நினைக்கிறார்கள்.

மே 2018 முதல் பிப்ரவரி 2020 வரையிலான 22 மாதங்களைத் தவிர, தனது அரசியல் வாழ்க்கையில் லிம் எதிர்க்கட்சி நாற்காலியிலேயே நீண்டகாலம் அமர்ந்திருந்தார். டாக்டர் மகாதீர் முகமது பக்காத்தான் ஹராப்பன் அரசாங்கத்தை அமைத்தபோது, ​​மகாதீரின் அமைச்சரவையில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதை லிம் மறுத்துவிட்டார். இளைய மற்றும் திறமையான டிஏபி அரசியல்வாதிகள் புதிய மலேசியாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார்.

கு லி இரண்டு முறை, நிதி மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2010-ம் ஆண்டில், 1980-களில் தான் நிதியமைச்சராக இருந்தபோது, ​​ அரசாங்கம் பணத்தைத் தண்ணீர் போன்று செலவழித்ததாகவும், பாதுகாப்பு அமைச்சர் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘எக்சோசெட்’ ஏவுகணைகளை வெறும் பயிற்சிக்காகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். அரசாங்கத்தின் அதிகப்படியான செலவுகளை வெளிப்படுத்த, பல ஆண்டுகள் எடுத்த ஒரு மனிதர் எப்படி நம்பிக்கைக்குரியவராக இருக்க முடியும்?

ஆனால், லிம் அப்படியல்ல, அரசாங்கத்தைப் பார்த்து அவர் ஒருபோதும் பயந்ததில்லை, மகாதீர் பதவி காலத்தின்போது, அவர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கீழ் தடுத்து வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

2016 மார்ச் மாதம், நஜிப் அப்துல் ரசாக்கை, நம்பிக்கையற்ற வாக்கெடுப்பு மூலம் வெளியேற்ற, கு லி சில அம்னோ-பாரு தலைவர்களுடன் இரகசியமாக சதி செய்ததாகவும், ஆனால் அவரால் போதிய எண்ணிக்கையைப் பெற முடியவில்லை என்பதையும் மகாதீர் வெளிப்படுத்தினார்.

தனது நோக்கம் தோல்வியுற்ற நிலையில், 1எம்.டி.பி. மற்றும் ரிம2.6 பில்லியன் ‘நன்கொடை’ ஊழல் வழக்கு காரணமாக நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வந்தபோது, நஜிப்பிற்குப் பிளவற்ற ஆதரவை வெளிப்படுத்த, மற்ற மாநில அம்னோ பாரு / பிஎன் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, கு லி ‘கிளந்தான் உடன்படிக்கை’-யில் கையெழுத்திட்டார். அவர் கவிழ்க்க விரும்பிய மனிதருக்கே, ஏன் விசுவாசம் கொண்டவராக கு லி மாற வேண்டும்?

உறுதியும் நிலைத்தன்மையும்

1966-இல், டிஏபி உருவாக்கப்பட்டது முதல் லிம் அக்கட்சிக்கு விசுவாசமாக இருந்து வருகிறார், அதேசமயம் கு லி, 1988-ஆம் ஆண்டில், மகாதீருடன் உடன்படாதபோது, அம்னோ பாருவை விட்டு வெளியேறி, செமாங்காட் 46-ஐ உருவாக்கினார். அவர் மகாதீரிடமிருந்து அம்னோ தலைவர் பதவியைப் பறிக்க முயன்றார். 1988-ஆம் ஆண்டு, கு லி அரசியலமைப்பில் நெருக்கடியைத் தூண்டினார், மகாதீர் அம்னோ பாருவை உருவாக்கினார்.

செமாங்காட் 46 அவ்வளவாக ஜொலிக்காததால், 1996-இல், கு லி மீண்டும் அம்னோ பாருவுக்கேத் திரும்பினார், அதன்பின்னர், ‘அம்னோ பாருவை உள்ளிருந்து சீர்திருத்துவேன்’ என்று அவர் கூறிக்கொண்டார், நாம் அதற்காக இன்னும் காத்திருக்கிறோம்!

லிம் அவரது விடாமுயற்சி, அவரது நிலைத்தன்மை மற்றும் ஆற்றலுக்காக அறியப்பட்டவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக டிஏபிக்குச் சேவை செய்த அவர், தனது ‘மலேசியர்களின் மலேசியா பார்வை’யில் இருந்து ஒருபோதும் விலகியவில்லை, இஸ்லாத்தை அதிகாரப்பூர்வ மதத்திலிருந்து ஒழிக்க ஒருபோதும் அழைப்பு விடுத்ததில்லை.

டிஏபி, மலாய்க்காரர்களுக்கு எதிரானது, இஸ்லாத்திற்கு எதிர்ப்பானது என்று, அம்னோ பல மலாய்க்காரர்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளது. அவர்களின் அந்தத் தவறானப் புரிதலை ஒழிக்க சில தலைமுறைகள் ஆகலாம்.

கு லி போன்ற அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதிகள். மலேசிய வரலாற்றின் மிகவும் சர்ச்சைக்குரியக் காலக்கட்டம் இப்போது, இதை எதிர்கொள்வது, மன்னருக்குச் சற்று கடினமாகதான் இருக்கும்.

ஐந்து தசாப்தங்களாக, மலேசியா மெதுவாகவும், முறையாகவும் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது – அரசியல், தார்மீகம் மற்றும் நிதி ரீதியாக – இதற்குப் பொறுப்பானவர்கள் அரசியல் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், பெரும்பாலும் அம்னோ பாருவைச் சேர்ந்தவர்கள்.

சில நேரங்களில், நாம், நம் நண்பர்கள் என்று கூறுபவர்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாது.

எழுத்து :- மரியாம் மொக்தார், வலைப்பதிவாளர்

தமிழாக்கம் :- சாந்தலட்சுமி பெருமாள்