அன்வர் தனது ஆதரவை நிரூபிக்கட்டும், மற்றவர்கள் தலையிட வேண்டாம்

பி இராமசாமி | திடீரென்று, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமை விசாரிக்க காவல்துறையினர் ஆர்வம் காட்டுகின்றனர். எந்த ஓர் அழுத்தத்திலும் தாங்கள் இல்லை என்றும் அவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

ஆனால், அன்வர் மீது ஏன் இந்தத் திடீர் ஆர்வம்?

எம்.பி.க்களின் பட்டியலை மாமன்னரிடம் சமர்ப்பித்ததற்காக, ஓரினப்புணர்ச்சிக்காக, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் சூதாட்ட மையங்களின் எண்ணிக்கை குறித்த அவரது கருத்துக்களுக்காக அன்வர் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று தெரிகிறது.

அந்தப் போர்ட்டிக்சன் எம்.பி.க்கு எதிராக, நூற்றுக்கணக்கான புகார்களைத் தாங்கள் பெற்றுள்ளதாக போலிஸ் தரப்பு கூறியுள்ளது, ஆனால் அவரை விசாரிக்க ஏன் இவ்வளவு காலம் அவர்கள் காத்திருக்க வேண்டும்?

அன்வர் பிரதமர் பதவியில் அமர்வதைத் தடுப்பதற்கான முயற்சிகளா இவை?

நான் முன்பு கூறியதைப்போல, அன்வர் அவருக்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களின் பட்டியலைச் சமர்ப்பித்தாரா, இல்லையா என்பது காவல்துறையிக்குத் தேவையில்லாதக் கவலை.

அன்வருக்கும் மன்னருக்கும் இடையில் என்ன நடந்தது என்பது காவல்துறையின் கவலை அல்ல.

நாட்டில் குற்றச் செயல்களைத் தீர்க்க, காவல்துறையினர் செய்ய வேண்டியது அதிகம் உள்ளது, ஆகவே, அன்வர் சட்டத்தை மீறவில்லை என்றால் ஏன் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டும்?

அன்வர் மற்றும் பல அரசியல்வாதிகளுக்கு எதிராக, நூற்றுக்கணக்கானப் போலிஸ் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இந்தப் புகார்களை எல்லாம் காவல்துறை முழுமையாக விசாரித்ததா என்பது எனக்குத் தெரியவில்லை.

அவற்றுள் பல புகார்கள் அடிப்படையற்றவை, அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டவை என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக மன்னரைச் சந்தித்து வந்தபின்னர், இந்தப் புகார்கள் விசாரிக்கப்படுவது தற்செயலானதா?

அன்வாரின் திட்டங்களைத் தடுத்து நிறுத்த, மலாய் பழமைவாத நிறுவனங்கள் ஏன் முயற்சி செய்கின்றன?

எம்.பி.க்களின் ஆதரவை நிரூபிக்க முடிந்தால், பிரதமராக ஆவதற்கு அன்வருக்கு உரிமை இல்லையா?

இவ்வாண்டு தொடக்கத்தில், ஒரு மோசமான, கொடூரமான புறக்கதவு அரசியல் முயற்சியால் பக்காத்தான் ஹராப்பன் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. அந்த மிகப்பெரியத் தவற்றைச் சரி செய்ய வேண்டிய நேரம் இது, அதனை அன்வர் தலைமையிலான அணியைத் தவிர வேறு எவராலும் செய்ய முடியாது.

காவல்துறை போன்ற அரசு நிறுவனங்கள், நாட்டில் வேகமாக மாறிவரும் அரசியல் செயல்பாட்டில் இருந்து தொழில் ரீதியாக விலகியிருக்க வேண்டும்.

அன்வரால் எம்.பி.க்களின் ஆதரவை நிரூபிக்க முடியாவிட்டால், அவர் பிரதமராக வர முடியாது, ஆக, குறைந்த பட்சம் அவருக்கு இருக்கும் ஆதரவை நிரூபிப்பதை மற்றவர்கள் தடுக்க வேண்டாம்.


பி இராமசாமி

பிறை சட்டமன்ற உறுப்பினர், பினாங்கு மாநிலத் துணை முதலமைச்சர் (II)