கிட்டிங்கன் : முஹைதீனுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு, கால விரயம்!

பிரதமர் முஹைதீன் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான அழைப்பு நேரத்தை வீணடிப்பதற்கானது என்று ‘பார்ட்டி சொலிடரிட்டி தனா ஆயேர்கு’ (ஸ்தார்) தலைவர் ஜெஃப்ரி கிட்டிங்கன் கூறியுள்ளார், காரணம், அடுத்தப் பிரதமர் நீண்ட காலம் பதவியில் நீடிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அம்னோ தலைவர்களுக்கும் முஹைதீனுக்கும் இடையிலான மோதலைக் கருத்தில் கொண்டு, தங்கள் கட்சி அரசியலைத் தற்காலிகமாக ஒதுக்கி வைக்குமாறும் அவர் தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் உள்ள கூட்டுக் கட்சிகளைக் கேட்டுக்கொண்டார்.

“அத்தகைய நடவடிக்கைகள், அன்வர் இப்ராஹிம் செய்ததைப் போல அரசாங்கத்தின் செயல்பாட்டைச் சீர்குலைக்க, சந்தர்ப்பவாதிகளுக்கு வாய்ப்பாக அமையும் என்று நான் கவலைப்படுகிறேன்.

“பொருளாதார நெருக்கடியையும் கோவிட் -19 பெருந்தொற்றையும் நாம் எதிர்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அரசியல் உறுதியற்ற தன்மையின் சிக்கலையும் நாம் ஏன் சேர்க்க வேண்டும்?”

கெனிங்காவ் நாடாளுமன்ற உறுப்பினரும் தம்புனன் சட்டமன்ற உறுப்பினருமான அவர், அரசாங்கத்தின் கூட்டாளிகளாக, அனைத்து கட்சிகளும் அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டுமே ஒழிய, பிரதமரை அச்சுறுத்தக்கூடாது.

“இந்தப் பிரச்சனை எப்போது தீரும்? அவர்கள் அரசாங்கத்தை வலுப்படுத்த உதவ வேண்டும், பலவீனப்படுத்தக்கூடாது என்று நான் நினைக்கிறேன்,” என்று சபா துணை முதல்வருமான அவர் கூறினார்.

15-வது பொதுத் தேர்தல் வரை, டாக்டர் மகாதிர் மீண்டும் பிரதமராக இருக்கட்டும் என்ற பெஜுவாங் கட்சியின் முன்மொழிவு நியாயமற்றது, காரணம், தற்போதையப் பிரதமரிடம் எந்தத் தவறும் இல்லை என்று கிட்டிங்கன் கூறினார்.

“முஹைதீன் ஆட்சி செய்ய அவரிடம் பெரும்பான்மையான எம்.பி.க்கள் இல்லை என்று அவர்கள் சொன்னால், துன் மகாதீர் அதைச் செய்ய முடியும் என்று அவர்கள் எப்படி நினைக்கின்றனர்? அவருக்கு நாடாளுமன்றத்தில் ஐந்து எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

தற்போது நாடு கண்ணுக்குத் தெரியாத ஓர் எதிரியுடன் போரில் ஈடுபட்டுள்ளது, எனவே, அப்போரில் வெற்றி பெற, அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார் கிட்டிங்கன்.

சபாவில், சபா மக்கள் கூட்டணி (ஜிஆர்எஸ்) அரசாங்கம் இப்போது நிலையானது, சவால்களை எதிர்கொள்வதில் அது கவனம் செலுத்துகிறது என்றார்.

“நாங்கள் ஜி.ஆர்.எஸ்.-இன் கீழ் ஒன்றுபட்டுள்ளோம், கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதிலும், வாரிசான் பிளஸ் நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் துன்பப்பட்ட பின்னர், மக்களின் நல்வாழ்வுக்காகப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் அரசாங்கம் இப்போது கவனம் செலுத்துகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.