மைசூரு தசரா ஊர்வலம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்-மந்திரி எடியூரப்பா

கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசராவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) எளிமையாக அரண்மனை வளாகத்தில் நடக்கிறது. இதனை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கிவைக்கிறார். இதில் 300 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மைசூரு,  கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்களாக தசரா விழா கோலாகலமாகவும், பாரம்பரியமாகவும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மைசூரு அரண்மனை வளாகத்தில் ஆயுதபூஜை விழா நடைபெற்றது. இதில் மைசூரு மகாராணி பிரமோதா தேவி, இளவரசர் யதுவீர், அவரது மனைவி திரிஷிகா குமாரி ஆகியோர் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்த உள்ளனர். மேலும் மன்னர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், வாகனங்கள், ரதங்கள் ஆகியவற்றுக்கு ஆயுதபூஜை செய்யப்பட்டது. அத்துடன் தசரா யானைகள், ஒட்டகங்கள், மாடுகள், குதிரைகள் ஆகியவற்றுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் இளவரசர் யதுவீர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்தினார்.

விழாவின் 10-வது நாளான இன்று (திங்கட்கிழமை) ஜம்புசவாரி ஊர்வலம் நடக்கிறது. தசரா விழாவின் சிகரநிகழ்ச்சியான இந்த ஊர்வலம் எப்போதும் மைசூரு அரண்மனையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பன்னிமண்டபம் வரை நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜம்பு சவாரி ஊர்வலம் இந்த ஆண்டு மைசூரு அரண்மனை வளாகத்தில் எளிமையாக நடக்கிறது. இதில் ஆண்டுதோறும் 15 யானைகள், 40-க்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகள், 50-க்கும் மேற்பட்ட கலைக்கழுவினர், குதிரைப்படை உள்ளிட்டவை பங்கேற்கும். இந்த ஊர்வலம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதில் 5 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 5 யானைகளும், 2 அலங்கார ஊர்திகளும், 5-க்கும் குறைவான கலைக்குழுவினரும் மட்டுமே இந்தாண்டு கலந்துகொள்கிறார்கள். மேலும் 300 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தசரா விழாவையொட்டி நடைபெறும் ஜம்புசவாரி ஊர்வலத்தில் கலந்துகொள்ள அபிமன்யு, விக்ரம், கோபி, விஜயா, காவேரி ஆகிய 5 யானைகள் வந்துள்ளன. இதில் அபிமன்யு முதல் முறையாக சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்க உள்ளது. இதற்கு முன்பு அர்ஜூனா யானை தான் பல ஆண்டுகளாக தங்க அம்பாரியை சுமந்து வந்தது. அர்ஜூனா யானைக்கு 61 வயது ஆவதால், தற்போது அதற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்புசவாரி ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக முஸ்டி காளகா என்னும் மல்யுத்த போட்டி அரண்மனை வளாகத்தில் இன்று காலை 7 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டியில் மொட்டை அடித்துக்கொண்ட இரு வீரர்கள் மோதுவார்கள். இதில் யாராவது ஒரு வீரரின் தலையில் ரத்தம் வந்தவுடன் மல்யுத்த போட்டி நிறுத்தப்படும். அதன் பின்னர் விஜயதசமி விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிடும். பகல் 12 மணிக்கு அரண்மனையில் உள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள உயரமான நந்தி தூணுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பு பூஜை நடத்துகிறார்.

அதன் பின்னர் ஜம்புசவாரி ஊர்வல ஏற்பாடுகள் தொடங்குகிறது. பகல் 12.45 மணி அளவில் காவல் தெய்வம் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியை சுமந்தபடி அபிமன்யு அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள மேடை அருகில் வந்து நிற்கும், அப்போது மேடை மீது நின்றபடி முதல்-மந்திரி எடியூரப்பா மலர் தூவி ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மகாராணி பிரமோதா தேவி, இளவரசர் யதுவீர், மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், கலெக்டர் ரோகிணி சிந்தூரி, துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத்நாராயண் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த ஊர்வலத்தில் அபிமன்யு, தங்க அம்பாரியை சுமந்தபடி செல்ல மற்ற யானைகள் அதனை பின்தொடர்ந்து செல்லும். அதன் பின்னர் கலைக்குழுவினரும், போலீஸ் பேண்டு வாத்திய குழுவினரும், 2 அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பு நடத்த உள்ளன. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, கொரோனா விழிப்புணர்வு அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது. பன்னிமர பூஜையை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான மைசூரு தசரா விழா நிறைவு பெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாக தசரா விழா எளிமையாக நடந்தாலும் மைசூரு நகரம் திருவிழா கோலம் பூண்டு களைகட்டி வருகிறது. தசரா விழாவையொட்டி அரண்மனை, மைசூரு நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள

dailythanthi