விடுதலைப் புலிகள்: 33 வருடங்களின் பின் பௌத்த பிக்குகள் கொலை வழக்கு – தமிழர்கள் படுகொலை விசாரணை எப்போது?

ராஜபக்ஷ ஆட்சியில் சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்தக் கோரி பிப்ரவரி 11, 2020 நடந்த போராட்டம்.

அம்பாறை – அரந்தலாவ பகுதியில் பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் 33 வருடங்களின் பின்னர் ஆரம்பித்துள்ளது.

அரந்தலாவ பகுதியில் 1987ஆம் ஆண்டு நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பித்து, இரு வாரங்களுக்குள் விசாரணை முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா, பதில் போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துகொள்ளுமாறும், சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவிக்கின்றார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணைகளை நடத்துமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

அம்பாறை – அரந்தலாவ பகுதியில் 1987ஆம் ஆண்டு ஜுன மாதம் 2ஆம் தேதி பௌத்த பிக்குகள் அடங்களாக 33 பேர் கூட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த படுகொலையை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாகவே கூறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், மூன்று தசாப்த யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பல்வேறு கூட்டு படுகொலைகள் நடத்தப்பட்ட போதிலும், குறிப்பாக 33 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தை மாத்திரம் விசாரணை செய்வதற்கு எடுத்த தீர்மானம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை 1984 ஆம் ஆண்டு

தமிழர்கள் கூட்டாக பல்வேறு சந்தர்ப்பங்களில் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு நியாயம் கோரி போராடி வருகின்ற போதிலும், அந்த சம்பவங்களை விசாரணை செய்யாது, பௌத்த பிக்குகளின் படுகொலை சம்பவத்தை மாத்திரம் விசாரணை செய்வது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

தமிழர்களின் படுகொலை விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முக்கிய பல வழக்கு விசாரணைகளை வாதாடிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேலை தொடர்புக் கொண்டு வினவியது.

அரந்தலாவ படுகொலை சம்பவத்தை 33 வருடங்களின் பின்னர் விசாரணைக்கு எடுப்பதானது, புரியாத புதிராகவே உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது என பிரித்தானிய நீதிமன்றம் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளமைக்கு, பதிலடியாகவே இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானம் எடுத்துள்ளதாகவே தான் கருதுவதாக அவர் கூறுகின்றார்.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என கூறும் சட்டத்தரணி, குறித்த இரண்டு சம்பவங்களையும் தொடர்புப்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அரந்தலாவ சம்பவத்தை விடவும் மிக மோசமான பல படுகொலை சம்பவங்கள் தமிழர்களுக்கு நடந்தேறியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த வழக்கு விசாரணைகள் எடுக்கப்படுமாக இருந்தால், நீதி கிடைக்காது தற்போதும் நிலுவையிலுள்ள தமிழர்களின் வழக்கு விசாரணைகளும் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார்.

தமிழர்களை படுகொலை செய்த பல முக்கிய வழக்குகள் இன்றும் விசாரணை செய்யப்படாது உள்ளதாக சட்டத்தரணி குறிப்பிடுகின்றார்.

இலங்கை 1992 ஆம் ஆண்டு

சில சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் சர்வதேசத்தின் தலையீடு காரணமாக, ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட போதிலும், அந்த விசாரணைகள் இறுதி கட்டத்தை எட்டவில்லை என சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் தெரிவிக்கின்றார்.

இதன்படி, திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் பணியாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் போன்ற சில விசாரணைகள் நடத்தப்பட்டு, முடிவடையாது உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்படாது, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரிகள் பின்னரான காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் நினைவூட்டியிருந்தார்.

இந்த முக்கிய வழக்குகளை எல்லாம் விடுத்து, அரந்தலாவ சம்பவத்திற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவதானது, பௌத்த பிக்குகளின் படுகொலை என்பதற்காக மாத்திரமே என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த அரசாங்கம் சிங்கள பௌத்த அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகவே, அரந்தலாவ பிக்குகள் படுகொலை சம்பவத்திற்கான விசாரணைகளை மீள ஆரம்பிக்கின்றனர் எனவும் அவர் கூறுகின்றார்.

அரந்தலாவ படுகொலை விசாரணைகளை நடத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதைவிட மிகவும் கூடுதலாக தமிழர்களின் படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தமிழர்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சுதந்திர இலங்கையில் முதன்முறையாக 1956ஆம் ஆண்டு ஜுன் மாதமே நடத்தப்பட்டதாகவும் சட்டத்தரணி நினைவுப்படுத்தினார்.

ரத்னவேல்

அம்பாறை – இங்கினியாகல பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்ட நிலையில், 150 தமிழர்கள் 1956ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழரசு கட்சி கொழும்பில் சத்தியாகிரக போராட்டத்தை நடத்தியமைக்கு பதிலடியாகவே இந்த படுகொலை நடந்தேறியதாகவும் அவர் கூறியிருந்தார்.

அன்று முதல் நடந்தேறிய படுகொலை சம்பவங்களை சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் பட்டியலிட்டு குறிப்பிட்டார்.

  1. வவுனியா – சாம்பல்தோட்டம் பகுதியில் 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  2. யாழ்ப்பாணம் – சுன்னாகம் போலீஸ் நிலையத்தில் 19 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  3. முல்லைத்தீவு – புதியமலை பகுதியில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
  4. வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  5. மணலாறு பகுதியில் எண்ணற்ற தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் காணாமல் போயுள்ளனர்.
  6. மன்னார் நகரில் 45 தமிழர்கள் உயிருடன் எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
  7. கொக்குலாய் பகுதியில் 100ற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
  8. மன்னார் – வட்டக்கண்டல் பகுதியில் 17 சிறுவர்கள் உள்ளடங்களாக 57 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
  9. அம்பாறை – உடும்பன்குளம் பகுதியில் 103 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
  10. திருகோணமலையில் 94 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
  11. குமுதினி படகில் பயணித்த 36 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
  12. யாழ்ப்பாணம் – நவாலி சென் பிட்டர்ஸ் தேவாலயத்தில் தங்கியிருந்த 100ற்கும் மேற்பட்டோர் வான் தாக்குதலினால் படுகொலை செய்யப்பட்டனர்.
  13. திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
  14. செஞ்சோலை சிறார்கள் உள்ளிட்ட 54 பேர் வான் வழித் தாக்குதலினால் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு பல சம்பவங்களை சட்டத்தரணி மேற்கோள்காட்டி, தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை நினைவுபடுத்தினார்.

தமிழர்களுக்கு எதிராக நடந்தேறிய இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகின்றார்.

சட்ட மாஅதிபர் அரசாங்கத்திற்கு மாத்திரம் சார்பாக செயற்படாது, சுதந்திரமாக பொதுவான ஒருவராக செயற்பட வேண்டும் என சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் கோரிக்கை விடுக்கின்றார்

TamilMirror