மீண்டும் அமெரிக்காவில் கருப்பர் சுட்டுக்கொலை; டிரம்புக்கு சிக்கல்?

அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்னர் ஜார்ஜ் புளாயிட் படுகொலை கருப்பர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து உலக அளவில் இனவெறிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. அமெரிக்காவின் பல மாகாணங்களில் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த சம்பவம் டொனால்ட் டிரம்ப் அரசுக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியது.

வரும் நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது டிரம்ப் அரசுக்கு ஓர் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கறுப்பர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாகியுள்ளது.

27 வயது கருப்பின குற்றவாளி ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை 4 மணி அளவில் வால்டர் வாலேஸ் என்கிற குற்ற பின்னணி கொண்ட நபர் போலீசாரை நோக்கி கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர் சரணடைய மறுத்து விட்ட நிலையில் அவர் சுடப்பட்டு உள்ளார். போலீசார் பாதுகாப்பு கருதி அவரது தோள்பட்டை மற்றும் மார்பில் பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்ட வால்டர், மரணம் அடைந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர்.

போலீசாரின் உடலில் பொருத்தி இருக்கும் பாடி காமிராவில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் பதிவாகி இருக்கும். பொதுவெளியில் போலீசார் யாரையாவது அச்சுறுத்தினால் தற்போதெல்லாம் பொதுமக்கள் அதனை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட துவங்கி விடுகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த குடிமக்கள் கூறுகையில், வால்டர் போலீசாரால் சுடப்பட்டார் என்கின்றனர். வால்டர் சுடப்பட்ட பின்னர் அங்கு போலீசாருக்கு எதிராக பொதுமக்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு காவல் அதிகாரி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வால்டர் எதற்காக சுடப்பட்டார், உண்மையிலேயே போலீசார் அவரை சுட முயற்சித்தனரா என எந்த விஷயமும் இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து பிலடெல்பியா மாகாணத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அரசுக்கு வரும் நாட்களில் இந்த சம்பவம் பெரும் சிக்கலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

dinamalar