பட்ஜெட் விவாதம் : முடிவு இப்போது முஹைதீன் கையில் – டிஏபி

2021 வரவிசெலவு திட்டம் தொடர்பாக, அரசாங்கத்துடன் விவாதங்களை நடத்த அவர்கள் தயாராக இருப்பதாக நம்பிக்கைக் கூட்டணி (பி.எச்.) கூறியுள்ளது.

டிஏபி அந்தோனி லோக் கருத்துப்படி, இந்த விவகாரம் குறித்த முடிவு இப்போது பிரதமர் முஹைதீன் யாசின் கையில் உள்ளது.

“நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டோம், அரசாங்கத்துடன் விவாதிக்க நாங்கள் தயார் என்று கூறியுள்ளோம், எனவே இப்போது அவர்களின் கருத்துக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக பி.எச். வாக்களிக்குமா என்று கேட்டதற்கு, லோக் வெறுமனே கூறினார்: “அதைச் சொல்வதற்கு இது மிக சீக்கிரம்”.

நவம்பர் 6-ம் தேதி, மக்களவையில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ள 2021 வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக, உடனடியாக எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாட வேண்டும் என்று பி.எச். தலைமை மன்றம் நேற்று முஹைதீனை வலியுறுத்தியது.

அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வப் பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றாலும், பி.எச். கூட்டணித் தலைவர்கள் சிலர் இந்த விஷயம் தொடர்பாக தேசியக் கூட்டணியின் (பி.என்.) ஒரு “பிரதிநிதியுடன்” “முறைசாரா பேச்சுவார்த்தைகளை” நடத்தியதாகத் தெரிகிறது.

பிரதமருடன் “நேரடி மற்றும் முறையான” கலந்துரையாடல்களை வலியுறுத்த பி.எச். தலைமை மன்றம் நேற்று ஒப்புக்கொண்டது.

“அரசாங்கத்திடமிருந்து நேரடியாக வராத ஒருவரிடம் நாங்கள் எவ்வாறு பேச முடியும்? எங்களுக்கு முறையான மற்றும் சரியான கலந்துரையாடல் தேவை,” என்று கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு வட்டாரம் தெரிவித்தது.

மாமன்னரின் ஆலோசனை படி, பி.எச். வரவு செலவு திட்டத்திற்கு உடன்பட தயாராக இருப்பதாக மற்றொரு பி.எச். ஆதாரம் தெரிவித்துள்ளது.

“ஆனால் நாங்கள் பிரதமருடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது மக்கள் நலனுக்காகவே. எனவே, தயவுசெய்து அதை (விவாதம்) அதிகாரப்பூர்வமாக்குங்கள்,” என்று அவர் கூறினார்.

அமானா துணைத் தலைவர் சலாவுதீன் அயூப், அமானா தொடர்புத்துறை இயக்குநர் காலித் சமாட் மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் உள்ளிட்ட பல பி.எச். தலைவர்கள், 2021 வரவு செலவு திட்டம் குறித்து முன்னதாக சில ஆலோசனைகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.