88% தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகின்றார்கள் : ஆய்வும் அதிசயமும்

குமரன் வேலுபெர்லிசு, பினாங்கு, கெடா, கிளந்தான், பேரா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, சோகூர், பகாங்கு மாநிலங்களில் உள்ள 527 பள்ளிகளில் 31 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, 750 ஆசிரியர்களிடம் ஆய்வினை மேற்கொண்டு அவர்களில் 88 விழுக்காட்டினர் தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்புகின்றார்கள் (அனுப்பினார்கள்) என்பதைக் கண்டிருக்கின்றார் ஆய்வாளர் சுப்பிரமணியம்.

அதை ஒட்டி நாட்டில் உள்ள ~9000 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களில் 88% அதாவது ~ 8000 பேர்கள் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகின்றார்கள் எனும் ஒரு பொதுமைப்படுத்தும் தரவலை நமக்கு தந்திருக்கின்றார். எழுச்சியும் ஊட்டுகின்ற தரவல். ஆனால், அது மிகை என்று படுகிறது சிலருக்கு.

தரவல் திரட்டிய முறையிலும் ஆய்வில் பங்கெடுத்த சிறிய எண்ணிக்கையிலான ஆசிரியர்தம் கருத்துகளின் அடிப்படையிலும் இவ்வாய்வின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு கேள்விகள் பிறரிடமிருந்து வந்தன.

உண்மையிலேயே தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களில் 88 விழுக்காட்டினர் தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் என்றால், அதைவிட மகிழ்ச்சிதரும் செய்தி நமக்கு வேறு எதுவாக இருக்க முடியும்?

வணிக நிறுவனமோ தொண்டு நிறுவனமோ, அவை இரண்டு வகை வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும்.

ஒன்று உள்வாடிக்கையாளர்கள் (ஊழியர்கள்). இவர்களின் உழைப்பினால்தான் நிறுவனங்கள் வளர்ச்சியைப் பெறுகின்றன. நிறுவனங்கள் மீது நம்பிக்கை வைத்து உழைப்பதால்தான் நிறுவனங்கள் வெற்றிப்பெறுகின்றன.

மற்றொன்று வெளி வாடிக்கையாளர்கள் (பயனீட்டாளர்கள்). இவர்கள், உள்வாடிக்கையாளர்கள் வழங்கும் சேவையின் அடிப்படையில் நிறுவனங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள்.

தமிழ்ப்பள்ளிகளைப் பொருத்தவரை, ஆசிரியர்கள்தான் உள்வாடிக்கையாளர்கள். முதலில், அவர்கள்தான் தமிழ்ப்பள்ளிகள் மீது நம்பிக்கைவைத்து பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அவர்கள் வழங்கும் சேவை கேலிக்குரிய கேள்வியாகி விடும். படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில் என்று மக்கள் பழிப்பார்கள்.

அண்மையக் காலமாகத் தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பாத ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மீது கடுமையான தாக்குதல்களைப் புலனங்களிலும் முகநூலிலும் பார்த்து வருகிறேன். ‘இழிபிறவியே, ஈனப்பிறவியே’, எனப் பழித்தும் இழித்தும் விமர்சனக்கணைகள் அவர்கள் மீது ஏவப்பட்டதை அவர்கள் அறிந்திருப்பர்.

நமது கேள்வி என்னவென்றால் ஆய்வாளர் எவ்வாறு ஆய்வில் பங்கெடுத்த ஆசிரியர்கள் வழங்கியத் தரவல் ‘உண்மையைத் தவிர வேறெதுவுமில்லை’ என்பதை உறுதிபடுத்தினார் என்பதுதான்.

ஆய்வு செந்தர செயல்முறைப்படியும் (standard operating procedure), நெறிமுறைப்படியும் (research ethics) ஆய்வில் பங்கெடுப்போர் கொடுக்கும் பதில்கள் உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.

என்ன பதில்வேண்டும் என்றாலும் அவர்கள் கொடுக்கலாம். ஆனால், அவர்களிடம் இருந்து உண்மையான பதிலை வரவழைக்கும் நம்பகத்தன்மை மிகுந்த (reliability) கேள்விகளை ஆய்வாளர்கள் கேட்பார்கள்.

தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பாத காரணத்தால் நிறைய சொல்லடிகளை வாங்கியிருக்கும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் கொஞ்சம் ‘உசார்’ ஆகி இருக்கும் நேரத்தில், அவர்களிடம் சென்று “தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்புவதைப் பற்றி ஆய்வு செய்கிறேன்” என்று கேள்வி கேட்டால், உண்மையான அல்லது நேர்மையான பதில் கிடைக்கும் என்று ஆய்வாளர் எப்படி நம்புகிறார் என்பதை அவர் விளக்கவில்லை.

மேலும், அவர் நடத்தியது சர்வே ஆய்வு (cross sectional survey research). ஆய்வாளர் யாரென்றே ஆசிரியர்களுக்குத் தெரியாது, உண்மையில் தெரிந்திருக்கக்கூடாது. ஆய்வாளர் யார் என்று தெரிந்துவிட்டால், அவரை மகிழ்விக்க, அவருக்குப் பிடித்த பதிலைச் சொல்லும் வாய்ப்புண்டு. தெரிந்தவர் இல்லை என்றாலும், அச்சத்தில் தமிழ்ப்பள்ளியில் பிள்ளைகளை அனுப்புவதாகப் பொய்யாக விடையளிக்கும் வாய்ப்பும் உண்டும்.

ஆய்வில் ஈடுபடுவோர் இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டுதான் ஆய்வு வினாக்களைத் தொகுப்பார்கள். உளவியல் (psychometry) அடிப்படையில் வினாக்கள் எழுப்பப்படுதல் இதனால்தான் அவசியமாகின்றது.

‘நான் தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளையை அனுப்புகிறேன்’ ஆம்/ இல்லை என்று பதில் கொடுக்கும் கேள்வி தவிர்க்கப்பட வேண்டும். இது வழிகாட்டும் கேள்வி (leading question) தவிர்க்கப்பட வேண்டும்.

மாறாக, நீங்கள் பிள்ளையை எந்தப் பள்ளிக்கு அனுப்புகின்றீர்கள்?

அ. தமிழ்ப்பள்ளி மட்டும்

ஆ. தேசியப்பள்ளி மட்டும்

இ. சீனப்பள்ளி மட்டும்

ஈ. பன்னாட்டுப் பள்ளி மட்டும்

உ. தமிழ்ப்பள்ளியும் தேசியப்பள்ளியும்

ஊ. தமிழ்ப்பள்ளியும் சீனப்பள்ளியும்

எ. தமிழ்ப்பள்ளியும் பன்னாட்டுப்பள்ளியும்

ஏ. பட்டியலில் இல்லை.

(நிறையத் தேர்வுகளைத் தெரிவு செய்யும் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆய்வின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.

ஒப்புக்கு ஒரு பிள்ளையைத் தமிழ்ப்பள்ளியில் போட்டுவிட்டு, மற்றவர்களை வேறுபள்ளியில் பதியும் ஆசிரியரை எப்படி அடையாளம் காண்பது?

இப்படித்தான் கேள்விகளும் பதில்களும் இருக்க வேண்டும். பள்ளிக்குச் செல்லும் பிள்ளை உள்ள ஒருவர், பட்டியலில் இல்லை என்ற பதிலைத் தேர்வு செய்தால் அவர் ‘outlier’ என்று தனிமைப் படுத்த வேண்டும். அல்லது, அவர் தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளையை அனுப்பாதவர் என்று முடிவு செய்ய வேண்டும்.

அடுத்து, ஓர் ஆசிரியரின் உளவியலில் ஓடிக்கொண்டிருக்கும் கருத்தை எப்படி அறிவது? உண்மையிலேயே அவர் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகின்றாரா என்பதைக் கண்டுபிடிக்க மறைமுகக் கேள்வியும் கேட்கப்பட வேண்டும்!

எ.கா. :- பெற்றோர்கள் பிள்ளைகளை

அ. எங்கு வேண்டுமானாலும் பதியலாம்

ஆ. எந்தப் பள்ளியில் பதிவது என்பதைப் பெற்றோர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்

இ. கண்டிப்பாகத் தமிழ்ப்பள்ளியில்தான் பதிய வேண்டும்.

இவற்றின் அடிப்படையில்தான் ஓர் ஆய்வின் முடிவு பொதுமைப்படுத்தப்பட வேண்டும். இல்லை என்றால், ஆய்வில் நம்பகத்தன்மை குறைவாகத்தான் இருக்கும்.

மேற்கூறப்பட்ட ஆய்வில், 33% ஆசிரியர்கள் திருமணமாகாதவர்கள் என்பதால், அவர்கள் ஆய்வில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்கின்றார் ஆய்வாளர். 33% x 9000 என்பது ~ 3000 ஆசிரியர்கள். அப்படியானால், 6000 ஆசிரியர்கள்தான் திருமணமானவர்கள்.

அவர்களில் எத்தனை விழுக்காட்டினர் குழந்தை இன்னும் பெறாதவர்கள், எத்தனை விழுக்காட்டினர் பள்ளிக்கு அனுப்பும் வயதில் பிள்ளைகளைக் கொண்டிருக்கின்றார்கள், எத்தனை விழுக்காட்டினர் தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளைத் தற்சமயம் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள், எத்தனை விழுக்காட்டினர் முன்பு அனுப்பினர், இப்போது இல்லை, எத்தனை விழுக்காட்டினர் ஒரு பிள்ளையை மட்டும் அனுப்பினர் எனப் பலவகையான தரவுகளைக் கண்டறிய வேண்டும்.

எப்படிப் பார்த்தாலும் இந்த ஆய்வு மறு ஆய்வுக்கு (Replicate) உட்படுத்தப்பட வேண்டும். ஆய்வின் முடிவு மறு உறுதிப்படுத்தப்பட்டால், எல்லோருக்கும் மகிழ்ச்சியே.

பலகாரணங்களைச் சொல்லி தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பாத ஆசிரியர்களுக்கு வேறு பள்ளிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.


#தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள், மலேசியக் கினியில் வந்த செய்தி (https://malaysiaindru.my/186734) தொட்டு முனைவர் குமரன் வேலு இராமசாமி எழுதிய கட்டுரை இது.