ராணுவ தளபதி நரவானேவுக்கு நேபாளத்தில் சிறப்பான வரவேற்பு

காத்மாண்டு : நேற்று நேபாளம் சென்ற இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேபாள ராணுவ தளபதி பூர்ண சந்திர தாபாவின் அழைப்பை ஏற்று நரவானே மூன்று நாள் பயணமாக நேபாளம் சென்றார். திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய நரவானேவை நேபாள ராணுவ – விமானப் படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பிரபுராம் வரவேற்றார். நரவானே உடன் அவர் மனைவியும் ராணுவ பெண்கள் நல்வாழ்வு சங்கத்தின் தலைவருமான வீணா உடன் சென்றுள்ளார்.’நரவானேவின் வருகை இந்தியா – நேபாளம் இடையிலான நல்லுறவை வளர்க்கவும் இரு தரப்பு ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தவும் உதவும்’ என நேபாள ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நரவானே ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ராணுவ கல்லுாரி மாணவர்களிடம் உரையாற்றுகிறார். அதன் பின் நேபாள ராணுவ தளபதி பூர்ண சந்திர தாபா உடன் இரு தரப்பு ராணுவ விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்துகிறார். ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி நரவானேவுக்கு நேபாளத்தின் கவுரவ ராணுவ ஜெனரல் பட்டம் வழங்குகிறார். இரவு பூர்ண சந்திர தாபா அளிக்கும் விருந்தில் நரவானே கலந்து கொள்கிறார். நாளை அவர் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியை சந்தித்து பேசிய பின் நாடு திரும்புகிறார்.

உத்தரகண்டில் லிபுலேக் – தர்சுலா இடையிலான 80 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை கடந்த மே 8 ல் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இந்த சாலை தன் எல்லைக்குள் உள்ளதாக கூறி நேபாளம் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த லிபுலேக் காலாபானி லிம்பியாதுரா பகுதிகளை இணைத்து புதிய நேபாள வரைபடத்தை வெளியிட்டது. இதனால் இந்தியா – நேபாளம் இடையிலான உறவு மோசமடைந்துள்ள சூழலில் நரவானேவின் நேபாள பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

dailythanthi