இந்தியப் பெண்கள் அமைச்சராகும் காலம் எப்போது வரும்?

இராகவன் கருப்பையா – இந்தியாவுக்கு வெளியே இந்திய வம்சாவளி அரசியல்வாதிகளின் அண்மைய கால உதயம் உண்மையிலேயே நம்மையெல்லாம் பிரமிக்க  வைக்கும் வகையில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

போர்த்துகல், ஃபீஜி, சிங்கப்பூர், குயானா, மோரிஷஸ் மற்றும் அயர்லாந்து, முதலிய நாடுகளில் பல்லாண்டுகளுக்கு முன்னதாகவே அதிபர் மற்றும் பிரதமர் போன்ற உயரிய பதவிகளை  அவர்கள் வகித்துள்ள போதிலும் சமீப காலமாக மேலும் 20கும் மேற்பட்ட நாடுகளில் இளம் அரசியல்வாதிகள் கால் பதிக்கத் தொடங்கியுள்ளதை நம்மால் காண முடிகிறது.

இந்நிலையில் பெண்களின் அரசியல் ஆதிக்கம் கண்டுவரும் பரிணாம வளர்ச்சி அதைவிட அதிசயிக்கும் வகையில் உள்ளதை யாரும் மறுக்க இயலாது.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைந்ததுதான் புதிய அமெரிக்க துணையதிபர் கமலா தேவி ஹாரிஸின் நியமனம்.

சிங்கப்பூர் மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகளில் இந்திய வம்சாவளிப் பெண்கள் முழு அமைச்சர்களாக உள்ள போதிலும் உலகிலேயே கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் அசுர பலம் பொருந்திய ஒரு நாட்டுக்கு இவ்வாரம் துணை அதிபராக தேர்வு பெற்றுள்ளதன் வழி பல சாதனைகளை படைத்துள்ளார் கமலா தேவி.

சிங்கப்பூரில் 57 வயதுடைய இந்திராணி ராஜாவும் நியூசிலாந்தில் 41 வயதுடைய பிரியங்கா ராதாகிருஷ்ணனும் இவ்வாண்டுதான் அமைச்சர்களாக நியமனம் பெற்றனர்.

தமிழ் நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசின்றபுரம் என்ற கிராமத்தை பூர்வீகமாகக்கொண்டுள்ள கமலா தேவி அமெரிக்காவின் முதல் பெண் துணையதிபர் மட்டுமின்றி முதல் கருப்பின துணையதிபரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  நம் நாட்டிலும் இந்தியப் பெண்கள் முழு அமைச்சர்களாக உலாவரும் காலம் கிட்டுமா என்ற ஏக்கம் நமக்கு இருக்கத்தான் செய்கிறது.

மலேசிய வரலாற்றில் இதுநாள் வரையில் இந்தியப் பெண் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறாதது மிகவும் வருத்தமான ஒரு விசயம்தான். அதிகபட்சம் நாடாளுமன்றச் செயலாளர் பதவியோடு நின்றுவிட்டது.

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ம.இ.க.வின் கோமளவல்லி கல்வியமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளராக நியமனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான’ கதையாக நாடாளுமன்றத்திற்குக் கூட எந்த ம.இ.க. மகளிரும் தேர்வு பெறவில்லை.

இருப்பினும் கடந்த 2013ஆம் ஆண்டிலும பிறகு 2018ஆம் ஆண்டிலும் தொடர்ந்தார்போல் இரு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வு பெற்றுள்ள ஜ.செ.க.வின் கஸ்தூரி ராணி பட்டு மட்டுமே தற்போது நமக்கு இருக்கும் ஓரே நம்பிக்கை நட்சத்திரம்.

கடந்த 1980களில் ஜ.செ.க.வின் பலம் பொருந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகத் திகழ்ந்த மறைந்த பி.பட்டுவின் இரு புதல்விகளில் ஒருவரான கஸ்தூரி ராணி பினேங்கின் பத்து கவான் தொகுதியில் இருமுறையும் மகத்தான வெற்றி பெற்றவராவார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்குமேயானால் கஸ்தூரி ராணி அமைச்சராக அல்லது துணையமைச்சராக நியமனம் செய்யப்படக்கூடய வாய்ப்பு உள்ளது.

நம் சமூகத்தின் மற்றொரு இரும்புப் பெண்மணி பஹாங்கின் சபாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமாச்சி துரைராஜு ஆவார்.

அதே தொகுதியில் 3 முறை தேர்வு பெற்றுள்ள அவர் அடுத்த பொதுத் தேர்தலின் போது நாடாளுமன்றத் தொகுதி ஒன்றுக்கு உயர்த்தப்பட்டால் அவருடைய வாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

கட்சியின் மேலிடத்தின் முடிவைப் பொருத்தே எல்லாமே அமையும் என்று கூறிய அவர் ஒரு மத்திய அமைச்சராகக் கூடிய தகுதியும் திறமையும் பெற்றுள்ளார் என்பதில் ஐயமில்லை.

ம.இ.க.வை பொருத்த வரையில் 2 அமைச்சர்கள் இருந்த காலம் கடந்து போய் இப்போது பழையபடி ஒரு அமைச்சருக்கு மட்டுமே அமைச்சரவையில் இடம் என்ற நிலையில் அக்கட்சியின் மகளிர் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த இடம் கிடைப்பது எட்டாக் கனிதான்.

மலாய்க்காரர்களை மட்டுமே மையமாக வைத்து அரசாங்கம் அமைப்பதில் உறுதியாக இருக்கும் நடப்பு அரசாங்கத்தில் அதற்கான சாத்தியமே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

ஆக ஒரு குட்டி நாடான சிங்கப்பூரில் கூட இந்திய வம்சாவளி பெண் ஒருவர் அமைச்சராக இருக்கும் போது இந்நாட்டில் பல தலைமுறைகளைக் கடந்து வேரூன்றி நிற்கும் நம் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சரவையில் இடம் பெறவேண்டும் என்று  ஆசைப்படுவதில் தவறே இல்லை.

அமெரிக்க அரசியலில் இனப்பாகுபாடு இல்லாததால் யார் வேண்டுமானாலும் அங்கு அதிபர் பதவி வரைகூட உயரலாம். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் மலேசியாவில் என்ன நிலைமை என்று நாம் எல்லாருமே அறிந்த ஒன்றுதான்.

‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு எனச்சொல்லி,  இடுப்பொடிக்கும் செயல்தன்னை தடுப்பதற்கு வழிகாண்போம்’, என்பதற்கு ஏற்ப நம் நாட்டிலும் இந்தியப் பெண்கள் கூடிய விரைவில் அரசியல் ஆதிக்கம் பெறவேண்டும்.

எனவே நம்முடைய இரு சிங்கப் பெண்களான காமாச்சி மற்றும் கஸ்தூரியின் அரசியல் பயணத்தில் அமைச்சரவையில் இடம் பெரும் அளவுக்கு இங்கு ஒரு கமலா தேவியைக் காணும் காலம் வெகுதூரமில்லை என்று உறுதியாக நம்பலாம்.