மிஸ் இந்தியா

சிறு வயதில் இருந்தே சொந்த தொழில் தொடங்க வெற்றி பெறுவதையே லட்சியமாக கொண்டவர் கீர்த்தி சுரேஷ். அவரது லட்சியத்துக்கு வீட்டில் தடை போடப்படுகிறது. படித்து முடித்த பின்னர் தடைகளை கடந்து சொந்தமாக தொழில் தொடங்குகிறார். அதிலும் போட்டியாளரான ஜகபதிபாபு மூலம் பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. அவற்றை எல்லாம் சமாளித்து எப்படி வென்றார் என்பதே கதை.

நடிகையர் திலகம் படத்துக்கு பின் தனக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெண்குயின் படத்துக்கு பின் வெளியாகும் படம். இந்த படத்தில் உடல் மெலிந்து பொலிவான தோற்றத்தில் வருகிறார். கனவுகளை அடைய போராடும் கதாபாத்திரத்தை திறம்பட செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷுக்கு போட்டியாளராக வரும் ஜகபதிபாபுவுக்கு பொருத்தமான கதாபாத்திரம். சில இடங்களில் விஸ்வாசம் படத்தை நினைவுபடுத்துகிறார். ராஜேந்திர பிரசாத், நரேஷ், நதியா என கீர்த்தி சுரேசின் குடும்பத்தினராக நடித்தவர்களும் சிறப்பான நடிப்பு. கீர்த்தி சுரேசுக்கு உதவும் கதாபாத்திரங்களான சுமந்த், நவீன் சந்திரா இருவரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.

தமனின் பின்னணி இசையும் சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவும் படத்தை கமர்சியல் படமாக மாற்ற உதவுகின்றன. படம் முழுக்கவே வெற்றி பெற்ற ஒரு பெண்ணின் பிளாஷ்பேக்காக அமைத்ததால் சுவாரசியம் குறைகிறது. யூகிக்க முடிந்த காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

இரண்டாம் பாதியில் வரும் மில்லியன் டாலர் போட்டி ரசிக்க வைக்கிறது. வசனங்களும் அருமை. நல்ல கதையை கையில் எடுத்த இயக்குனர் அதற்கான திரைக்கதை சுவாரசியமாக அமைக்க தவறிவிட்டார். கீர்த்தி சுரேஷ் தான் படத்தை தாங்கி இருக்கிறார். அவருக்காக மட்டுமே பார்க்கலாம்.

malaimalar