2021 வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க, பெஜுவாங் 12 நிபந்தனைகள்

மக்களவை | தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தின் 2021 பட்ஜெட்டிற்குத் தங்கள் கட்சியின் எம்.பி.க்கள் ஆதரவளிக்க, பெஜுவாங் 12 நிபந்தனைகளைப் பட்டியலிட்டுள்ளது.

பெஜுவாங் தலைவர், முக்ரிஸ் மகாதிர் (சுயேட்சை-ஜெர்லுன்), தாங்கள் முன்மொழியும் திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், 2021 பட்ஜெட்டைத் தனது கட்சி உறுதியாக நிராகரிக்கும் என்று கூறினார்.

அந்த 12 நிபந்தனைகளில் கடன் தடையை நீட்டித்தல் மற்றும் பி.என். கூறியதுபோல், ஈபிஎஃப் கணக்கு 1-ல் இருந்து மொத்தத் தொகையைத் திரும்பப் பெறுதல் ஆகியவையும் அடங்கும்.

“நாங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றால் பட்ஜெட்டை நிராகரிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

“தற்போதைய சூழ்நிலையில், அரசாங்கம் பணத்தை வீணாக்காமல் இருப்பதற்கே இந்த 12 நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளன,” என்று முக்ரிஸ் இன்று மக்களவையில் நடந்த விவாத அமர்வின் போது கூறினார்.

மற்றொரு நிபந்தனை, அமைச்சுகள் கட்டிட வளாகம் சம்பந்தப்பட்ட கட்டுமான திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும்.

RM7.9 பில்லியனிலிருந்து RM11 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ள, பிரதமர் துறைக்கான ஒதுக்கீட்டையும் பெஜுவாங் குறைக்க விரும்புகிறது.

அனைத்து மெகா திட்டங்களையும் ஒத்திவைத்து, சிறிய திட்டங்களில் கவனம் செலுத்துமாறு கட்சி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

“அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் சம்பளத்தை முடிந்தால் 30 விழுக்காடு வரை குறைக்கவும்.

“தொற்று அல்லாத நோய்களுக்கான சுகாதார அமைச்சின் பட்ஜெட்டை அதிகரிக்கவும், ஏனென்றால் நாம் கோவிட் -19 தொற்றுடன் போராடி வருகிறோம் என்பதற்காக, மற்ற நோய்கள் இப்போது இல்லாமல் போய்விட்டன என்று அர்த்தமல்ல,” என்று முக்ரிஸ் மேலும் கூறினார்.