ஏர் ஏசியா முதலாளி ஸ்காட்லாந்தில் உள்ள சொத்தை விற்கிறார்

ஏர் ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தோனி ஃபெர்னாண்டஸ், ஸ்காட்லாந்து, அயர்ஷையரில் உள்ள, 2.5 மில்லியன் பவுண்டுகள் அல்லது RM13.55 மில்லியன் மதிப்புள்ள தனது சொத்தை விற்றதாகக் கூறப்படுகிறது.

ஏஜென்சியை மேற்கோள் காட்டி, பெரித்தா ஹரியான் இணையச் செய்திகளின் படி, குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் காற்பந்து அணியின் முன்னாள் தலைவரான 56 வயது, ஃபெர்னாண்டஸ், முன்பு அயர்ஷையர், டால்ரிம்பிளில் உள்ள ஸ்கெல்டன் ஹவுஸில் ஏழு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.

கோவிட் -19 தொற்றுநோயால், மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தனது வணிக சாம்ராஜ்யத்தைக் காப்பாற்ற, 125 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த மாளிகையை அவர் தியாகம் செய்ய வேண்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐந்து அறைகள் கொண்ட இந்த மாளிகையில், ஒயின் பாதாள அறை, உடற்பயிற்சிக் கூடம், சவுனா மற்றும் டென்னிஸ் கோர்ட் போன்றவையும் உள்ளன.

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ), பயணிகள் விமானத் தொழில்துறை 252 பில்லியன் அமெரிக்க டாலர் (RM1.1 டிரில்லியன்) வருவாயை இழக்கும் அல்லது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட நான்கு விழுக்காடு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.

ஐஏடிஏ-இன் கூற்றுப்படி, மோசமானப் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் உலகளாவிய மந்தநிலையின் காரணமாக இந்த வருவாய் குறைப்பு ஏற்பட்டுள்ளது.

கோவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) காலத்தில், தனது விமானங்களில் 96 விழுக்காடு செயல்பட முடியவில்லை என கடந்த ஏப்ரல் மாதம் ஃபெர்னாண்டஸ் வெளிப்படுத்தினார்.

வருமானம் ஈட்டவில்லை என்றாலும், அந்தக் குறைந்த விலை விமானச் சேவை நிறுவனம், எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் குத்தகையாளர்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய நிதிக் கடமைகளைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இதனால், ஏர் ஏசியா ஊழியர்கள், தங்கள் சேவைகால அளவைப் பொறுத்து, 15 முதல் 75 விழுக்காடு வரை சம்பளக் குறைப்பைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது.