கருத்து : ‘தேசியக் கூட்டணி அரசாங்கம் ஓராங் அஸ்லியைப் புறக்கணிக்கிறது’

பி இராமசாமி | மலேசியாவில் உள்ள ஓராங் அஸ்லி சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளைப் பணத்தால் மட்டும் தீர்க்க முடியாது எனும் ஓராங் அஸ்லி ஆர்வலர்களின் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்.

பிரிட்டிஷ் காலனித்துவக் காலத்தில், கம்யூனிஸ்டுகளின் ஆயுதமேந்திய கிளர்ச்சியை வேவுபார்த்து உளவுத்துறையிடம் வழங்கியதால் ஓராங் அஸ்லி சமூகத்திற்கு மரியாதை அளிக்கப்பட்டது.

கம்யூனிஸ்டு கிளர்ச்சியாளர்களை வேட்டையாடுவதில் கைத்தேர்ந்த அவர்களுக்கு, சிறந்த ‘ஜங்கிள் டிராக்கர்கள்’ என்று பாராட்டுக்கள் வழங்கப்பட்டன.

கிளர்ச்சி முடிந்து, காலனித்துவத்திற்குப் பிந்தைய அரசாங்கம், ஓராங் அஸ்லியின் விவகாரங்களை நிர்வகிக்க ஏஜென்சிகளை உருவாக்கியதேத் தவிர, ஓராங் அஸ்லி சமூகத்தின் கௌரவத்தை மதிக்கும் வகையில் கணிசமான எதனையும் செய்யவில்லை.

சில தரப்பினரின் அழுத்தத்தின் காரணமாக, ஒராங் அஸ்லி இருப்புக்கள் (reserves) உருவாக்கப்பட்டன, ஆனால் பின்னர் கால ஓட்டத்திலும் பேராசையினாலும், இந்தப் பகுதிகளில் முதலாளித்துவத்தின் படையெடுப்பால், காட்டுமரங்களும் சுரங்கங்களும் களவாடப்பட்டன.

மக்கள் தொகையில் மிகவும் சிறிய எண்ணிக்கையிலான, சுமார் 200,000 அல்லது அதற்கும் குறைவாக, ஒராங் அஸ்லி சமூகம், பல்வேறு குழுக்களாக ஆங்காங்கே பிரிந்துசென்றன.

 

நாட்டின் பிற இனத்தவர்களுடன் ஒப்பிடுகையில், ஒராங் அஸ்லி சமூகம் ஏழ்மையானது, அடிப்படைக் கல்வி இல்லாதது, அவர்களின் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், மேலும் இவர்களிடையே இறப்பு விகிதங்களும் அதிகம், குழந்தைகள் முதல் பெரியவர் வரை.

தற்போதைய அரசாங்கம், ஓராங் அஸ்லியை முற்றாகப் புறக்கணிக்கிறது என்பதல்ல, மலாய்க்காரர்களின் இன மற்றும் மத உரிமைகளைப் பாதுகாத்து, முன்னேற்ற வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படுவதோடு ஒப்பிட்டால், ஓராங் அஸ்லியின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படுவது  தெரியும்.

‘பூமிபுத்ரா’ என்ற சொல் கூட, ஓராங் அஸ்லியை விட மலாய்க்காரர்களுக்குதான் இப்போது மிகவும் பொருந்தி வருகிறது, மலாய் தீபகற்பத்தில் ஓராங் அஸ்லியின் இருப்பு பழங்காலத்தில் இருந்து உள்ளபோதிலும்.

மேலும், ஆறு தசாப்த காலமாக, இன மற்றும் மத அரசியல் ஒராங் அஸ்லி மற்றும் பிற சிறு சமூகங்களை எதிர்மறையாக பாதித்துள்ளதை மறுக்க முடியாது.

மேலாதிக்க அரசியலின் உந்துதலால், ஓராங் அஸ்லி சமூகத்தின் எதிர்காலம் புறக்கணிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுருக்கமாக சொன்னால், அவர்களுக்கென்று எதுவும் இல்லை.

தேசியக் கூட்டணியின் ‘மலாய் மட்டுமே’ அரசாங்கத்தில், ஓராங் அஸ்லிக்கு வழங்குவதற்கு ஒன்றும் இல்லை.

கோவிட் -19 தொற்றுநோயால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு, குறிப்பாகத் தொழிலாளர் வர்க்கத்திற்குக் கொடுக்க அரசாங்கத்தில் எதுவும் இல்லை.

2021 வரவு செலவு திட்டத்தில், மலாய்க்காரர்களுக்குச் சில பில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் போது, வெறும் ​​RM158 மில்லியனை ஒராங் அஸ்லிக்கு –  மலேசியாவின் “உண்மையான” பூமிபுத்ராக்கள் அவர்கள்தான் என்று நான் நினைக்கிறேன் – ஒதுக்கியது மிகச் சாதாரணமானது.

ஒதுக்கப்பட்ட அந்தத் தொகை, ஒராங் அஸ்லியின் சமூக நலனைக் கவனிக்கும் பொறுப்பில் உள்ள ஏஜென்சிகளின் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.

ஒராங் அஸ்லி சமூகத்திற்கு அவர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நல்வாழ்வைக் கவனிக்க, அவர்கள் தரப்பில் இருந்து படித்தவர்கள் தேவை.

அம்னோ அல்லது மற்ற இனவாரி கட்சிகளின் உறுப்பினர்களால் இவர்களுக்குச் சிறந்த சேவையாற்ற முடியாது.

2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில், ஓராங் அஸ்லி சமூகத்திற்கு இவ்வளவு குறைவான ஒதுக்கீட்டைச் செய்ததற்காக தேசிய முன்னணி அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.


பி இராமசாமி பிரை சட்டமன்ற உறுப்பினர், பினாங்கு துணை முதலமைச்சர் (II)