முன்னாள் இராணுவத் தளபதி : மதுபான விற்பனைக்கானப் புதிய கட்டுப்பாடுகளை நீக்குங்கள்

அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் மளிகை கடைகள், பல்பொருள் விற்பனைக் கடைகள் மற்றும் சீன மருந்துக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்வது தொடர்பில், கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்.) விதித்துள்ள தடைகளுக்கு எதிராக, மலேசிய ஆயுதப்படையின் முன்னாள் தலைமை அதிகாரி ஹாஷிம் மொஹமட் அலி, இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

மது அருந்துவதை ஊக்குவிப்பது தனது தொழில் அல்ல என்றாலும், முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகளை அரசாங்கம் மதிக்க வேண்டும் என்றார் அவர்.

மலேசியர்கள், பல மதங்கள் கொண்ட நாட்டில் வசிப்பதால், பல தலைமுறைகளாக, இந்தக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்வதில் எந்த பிரச்சனையும் எழவில்லை என அவர் மேலும் சொன்னார்.

“மலேசிய ஆயுதப் படையும், பல இனங்களைக் கொண்டது, முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொண்டது. பெர்பாடானான் பெர்விரா நியாகா மலேசியா (பெர்னாமா) கடைகளிலிருந்து முஸ்லிம் அல்லாத அதிகாரிகளும் இராணுவவீரர்களும் மதுபானம் வாங்குவதும் குடிப்பதும், ஒரு பிரச்சினையாக ஒருபோதும் இருந்ததில்லை.

“உண்மையில், மூத்த அதிகாரிகள் தங்கள் மேற்பார்வையின் கீழ் முஸ்லிம் அல்லாத ஆயுதப்படை வீரர்களின் வாங்குதல் மற்றும் குடிப்பழக்கத்தைக் கண்காணிக்க இது அனுமதிக்கிறது,” என்று ஹாஷிம் தெரிவித்தார்.

“இந்தக் கடைகளில் சிகரெட் போன்ற இன்னும் பல தீங்கு விளைவிக்கும் பொருள்கள் விற்பனையில் உள்ளன.

“மேலும், இந்தப் பொருளாதார நெருக்கடி காலத்தில், முறையான வணிக நடவடிக்கைகளைத் தடுப்பது சரியல்ல,” என்றும் ஹாஷிம் கூறினார்.

“இதைவிடக் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பிரதமர் துறையின் (மத விவகாரங்கள்) துணை அமைச்சராக இருக்கும் பாஸ் தலைவர் அஹ்மத் மர்சுக் ஷாரி, இந்தத் தடை மற்ற மாநிலங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்,” என்று ஹாஷிம் கூறினார்.

“புதிதாக ‘அமைச்சர்’ பதவிக்கு வந்திருக்கும் அவர், அவர்தம் மத நம்பிக்கைகளை, வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் மலேசியர்களிடம் கண்மூடித்தனமாகத் திணிக்கக்கூடாது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

“இதுவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது, முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை, சக்திவாய்ந்த பெரும்பான்மை முஸ்லிம்களின் பராமரிப்பில் வைக்க இது கட்டளையிடுகிறது,” என்று ஹாஷிம் மேலும் கூறினார்.

இது ருக்குன் நெகாராவின் கொள்கையையும் தேசிய ஒற்றுமை மற்றும் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையிலான கலாச்சார நல்லிணக்கத்தையும் குறைமதிப்பிடக்கூடும் என்பதால், மது மீதான தடையை நீக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.